பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
*34 வகையான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பு
ஊட்டி : பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று ஊட்டியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா துவங்கியது. 34 வகையான போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை திறன்களை வெளி கொணரும் விதமாக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலை திருவிழாக்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில், வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இவ்விழா வழிவகுக்கும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் 2025-26 துவங்கி நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில், முதலிடம் பிடித்தவர்கள் வட்டார அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டார அளவிலான போட்டிகள் இம்மாதம் நடைபெற்றது. இதில்,வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நேற்று ஊட்டியில் துவங்கியது.
ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி, ஜேஎஸ்எஸ்., பார்மஸி கல்லூரி அரங்கு, சிஎஸ்ஐ., சிஎம்எம்., மேல்நிலை பள்ளி ஆகிய 3 இடங்களில் நடந்தது. நேற்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தன. இதனை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சசிக்குமார் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அர்ஜூணன், ஜேஎஸ்எஸ். கல்லூரி துணை முதல்வர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், களிமண், காய்கறி சிற்பங்கள், வண்ணம் தீட்டுதல், நகைச்சுவை அரங்கம், வில்லுப்பாட்டு தனிநபர் நடிப்பு, மெல்லிசை, இசைக்கருவி மீட்டுதல், தனிநபர் நடனம் என 34 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 544 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறமைகளை நிரூபித்தனர். தொடர்ந்து இன்று 9, 10ம் வகுப்புகளுக்கும், நாளை 11,12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பெத்தலகேம் பள்ளி உட்பட 4 இடங்களில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு போட்டிகளிலும் முதலிடம் பிடிப்பவர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவிலான போட்டிகள் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பங்கேற்ற மாணவர்களுக்கு உணவு, தேநீர் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.