சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் நல்ல தீர்வு உண்டு - பாரம்பரிய சித்த மருத்துவர் பிரியா கோவிந்தராஜன்!!
இந்தியாவின் மிக பாரம்பரியமான மருத்துவ முறைகளே சித்த மருத்துவம் என்கிற இயற்கை மருத்துவம். பல நூறு வருடங்களுக்கு முன்பே நமது சித்தர்கள் மற்றும் துறவிகள் இந்த மருத்துவ முறையை ஆராய்ந்து, மருந்தளித்து நிறைய பலன்களை பெற்றதாலேயே ‘சித்தா’ எனப் பெயர் பெற்றது. இது பெரிதும் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத, மற்றும் சிறந்த ஒரு மருத்துவ முறையாகவே கருதப்படுகிறது. நமது அன்றாட உணவினையே மருந்தாகக் கருதும் ஒரு சிறப்பம்சம் நிறைந்த மருத்துவமுறையாக இருப்பதே இதன் தனி சிறப்பு. இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவத்தினை நாங்கள் பல தலைமுறைகளாக செய்து வருகிறோம் என்கிறார் சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பினை முடித்து சித்த மருத்துவராக உள்ள இளம் பெண் பிரியா கோவிந்தராஜன்.
சித்த மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? எப்போது?
எங்களது குடும்பம் பல தலைமுறைகளாக சித்த மருத்துவ தொழிலை தொடர்ந்து செய்து வந்தது. எங்களது முதாதையர் ஏறக்குறைய 250 வருடங்களாக சித்த மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்கள். எனது தந்தையும் சித்த மருத்துவர் தான். அதனால் எனக்கு இயல்பாகவே சித்த மருத்துவத்தில் ஆர்வமும் நிறைய நடைமுறை அனுபவங்களும் இருந்தது. இதற்கென நான் முறையாக படித்து பட்டம் பெற்று சித்த மருத்துவ தொழிலை தொடர்ந்து செய்து வருகிறேன். எங்களது பாரம்பரிய மருத்துவமனை சேலத்தில் தான் மருத்துவ தொழிலை தொடர்ந்தேன். தற்போது சென்னையிலும் எனது சித்த மருத்துவம் செய்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக பல்வேறு விழிப்புணர்வு காணொலிகள் மூலமாக நிறைய பேருக்கு சித்த மருத்துவம் குறித்து போதுமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் செய்து வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்களது பல தலைமுறையின் மருத்துவ அனுபவங்களை கருத்தில் கொண்டு சேலம் பகுதியில் பாரம்பரியமான எங்களது சித்த மருத்துவத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனது தந்தையின் உதவியுடன் கடந்த சில வருடங்களாக எனது சித்த மருத்துவ பணியினை சிறப்பான முறையில் வெற்றி கரமான வகையில் தொடர்ந்து வருகிறேன். சித்த மருத்துவத்துடன் யோகா, வர்மக்கலை ஆகியவற்றோடு மூலிகை மருத்துவமும் முறையாக படித்து பட்டம் பெற்றுள்ளேன்.
சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன?
ஒவ்வொரு உடலின் தன்மைக்கு ஏற்றவாறு வாதம், பித்தம், கபம் போன்ற அடிப்படைக் கூறுகளைக் கொண்டு மருத்துவம் செய்து வருகிறோம். இதற்கான மருந்துகளை இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருட்களான புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், இலை, காய், பழம் போன்ற இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி தான் தயாரித்து தருகிறோம். எங்களுக்கு சொந்தமான மூலிகைத் தோட்டம் இருக்கிறது. அதில் அரியவகை மூலிகைகளை நட்டு பயிரிட்டு வளர்த்து வருகிறோம். அதிலிருந்து கிடைக்கும் மூலிகைகளை பறித்து நாங்களே மருந்துகளை தயாரித்து தருகிறோம். மேலும் சேலம் ஏற்காடு கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் இயற்கை மூலிகைகளையும் சித்த மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம்.மேலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சொரியாசிஸ் , நாட்பட்ட தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வுகள் உள்ளது. சீரான உணவு பழக்கங்களுடன் நல்ல பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சென்று முறையான முறையில் சித்த மருந்துகளை உட்கொண்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம். குழந்தையின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வுகள் இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் இதன் பலன்களை உணர்ந்து எங்களை அணுகி வருகிறார்கள். எங்களது மருத்துவ முறைகளில் அவர்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறந்து நல்ல முறையில் செல்வது மகிழ்ச்சியான விஷயம். சித்த மருத்துவத்தில் துளசி, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, அருகம்புல், ஆடாதோடை, நொச்சி போன்ற பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன, இவை ஒவ்வொன்றும் செரிமானம், காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலவீனம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்குத் நல்ல பலனைத் தருகிறது.
நீரிழிவு நோய் மற்றும் வாத நோய்க்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வு இருக்கிறதா?
இன்றைய நவீன உலகில் மிகப் பெரிய சவாலாக நீரிழிவு நோய் உருவெடுத்திருக்கிறது. நீரிழிவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நம் உடலில் ஏற்படும் பல்வேறு உறுப்புகள் சிதைவுகளும் , உடல்நல சிக்கல்களும் பல்வேறு ஆபத்துகளை கொடுத்து வருகிறது. இந்த நோயின் தன்மையாக பக்க விளைவுகள் அதிகம் என்பதால் நீரிழிவு நோய் குறித்து கவனமாக இருப்பது அவசியமான ஒன்று. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை நீரிழிவு ‘மேகநோய்’ எனவும் ‘மதுமேகம்’ எனவும் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சித்த மருந்தில் முதலில் உடலில் சேரும் கழிவை நீக்குவதுதான் முக்கியமாக சொல்வோம். அதனால்தான் குறிப்பிட்ட இடைவெளி காலத்தில் பேதி மருந்து எடுத்துக்கொள்வதையும் வலியுறுத்துகிறோம். சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே நோயாளிகள் சித்த மருத்துவத்துக்கு வந்தால், சித்த மருந்துகள் மூலமே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி விடலாம். அதேபோல் தமிழ் சித்த மருத்துவத்தில் எண்பது வகையான வாத நோய்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த முடக்குவாதம் அல்லது சரவாங்கி என்கிற வாதநோய். முடக்குவாதம் ஏற்பட்டால் உடலில் உள்ள எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும். இதற்கு எங்கள் ஆதி அகத்தியர் சித்த மருத்துவ பாரம்பரிய முறையில் நல்ல சிகிச்சை முறை இருக்கிறது. எங்களிடம் எல்லாவிதமான நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கிறது. பலரும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சித்த மருத்துவத்தின் மீது நல்ல நம்பிக்கைகள் கொண்டு இந்த மருத்துவ முறைகளை மேற்கொண்டு நல்ல பலனை பெற்று வருகிறார்கள்.
தற்போது பலருக்கு சித்த மருத்துவம் குறித்து நல்லதொரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ‘‘நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்” என்கிற வள்ளுவர் குரலுக்கு ஏற்ப ஒவ்வொரு நோயின் தன்மைக்கேற்ப புரிந்து , அதனை உணர்ந்து ஒவ்வொருவருக்கும் மருத்துவம் செய்வதே சித்த மருத்துவத்தின் பெரும் சிறப்பு என்கிறார் இந்த இளம் மருத்துவர் பிரியா கோவிந்தராஜன்.இவர்களது மருத்துவ முறைகளுக்காகவும், பல்வேறு நோய்களின் அனுபவம் வாய்ந்த சிகிச்சை முறைகள் மற்றும் பணிகளுக்காகவும் நூற்றிற்கும் மேற்பட்ட விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் சித்த மருத்துவர் பிரியா கோவிந்தராஜன். அதில் கோல்டன் அச்சீவர் விருது , அன்பு தமிழச்சி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் ஜெய்டன் வழங்கிய சிறந்த சித்த மருத்துவர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது எனது மருத்துவ பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உந்துசக்தி என்கிறார் இந்த இளம் மருத்துவர்.
- தனுஜா ஜெயராமன்