கிராமங்களோடு பெருநகரங்களும் விதிவிலக்கல்ல... பாகுபாடு என்பது உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது: கலாச்சார சீர்திருத்தம் அவசியம், சமூக மேம்பாட்டு அமைப்புகள் ஆதங்கம்
இந்த தினமானது அனைத்து நாடுகளிலும், பாகுபாடுகளை ஒழித்து உலகளாவிய ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கொண்டாடப்படுகிறது. இதில் குறிப்பாக ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சந்திக்கும் அவமானம், சமூகம் அவர்களை நோக்கும் அவமானமான கண்ேணாட்டம் போன்றவற்றை மாற்ற வேண்டும். போதையின் பிடியில் சிக்கியவர்கள், கைதிகளை பல்வேறு நிலைகளில் களங்கத்துடன் சித்தரிக்கும் அவலம் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு, இந்த நாளில் அதிகளவில் ஏற்படுத்தப்படுகிறது.
உலகளவில் 15வயது முதல் 49வயதுடைய பெண்களின் இறப்புக்கு, ஹெச்ஐவி தொற்று என்பது மிக முக்கிய காரணமாக உள்ளது. 2030ம் ஆண்டிற்குள் எய்ட்சை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பது உலகநாடுகளின் இலக்காக உள்ளது. நிச்சயமாக ஹெச்ஐவி தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும் என்பதற்கு சாதகமான அம்சங்களும் ஏராளமாக உள்ளது. ஆனாலும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதனை தொடர்ந்து பெருகச் செய்கிறது.
எனவே, இதனை எதிர்கொண்டு பெண்கள் மற்றும் சிறுமிகளின் உண்மையான தேவைகளை ஊக்குவிப்பது முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதே போல், பல்வேறு நிலைகளிலும் பாகுபாடு தொடர்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தின விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: வாழும் இடம், பேசும் மொழி, செய்யும் தொழில், பின்பற்றும் மதம், சாதி, பாலினம், பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சக மனிதர்களிடம் பாகுபாடு காட்டும் அவலம் உலகம் முழுவதும் இன்றளவும் தொடர்கிறது.
கிராமப்புறங்கள், நகரப்புறங்கள், பெருநகரங்கள் என்று எந்த வாழ்க்கை சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே, மனிதர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க முதலில் நமது கலாச்சாரங்களை சீர்திருத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்களை முற்றிலும் ஒழிப்பதும் இந்த நாளின் முக்கிய இலக்காக உள்ளது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள், போதையின் பிடியில் சிக்கியவர்கள் என்று பாகுபாடு பார்த்து பலரை பிரித்து வைத்திருப்பதே கொடிய நோய் பரவல்களுக்கு ஒரு முக்கிய காரணம்.
இது மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் இயல்பான வாழ்க்கை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அல்லது அதற்கான வாய்ப்புகளை முழுமையாக ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கமும், சமூகமும் சுணக்கம் காட்டுகிறது. இதுவும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில், இன்றைய உலகில் நாம் அனைவரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவர்கள். சமூக ஏற்றத்தாழ்வுகள் எங்கிருந்து வந்தாலும், நாம் யாராக இருந்தாலும் அனைவரையும் பாதிப்பில் ஆழ்த்தி விடும் என்பதையும் உணர வேண்டும்.
பல நாடுகளிலும் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள் உள்ளது. ஆனாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் இன்றுவரை இதுவொரு பெரும் பிரச்னையாகவே இருந்து வருகிறது. பல நாடுகள் பாகுபாடு என்பதை ஆளும் வழியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பாகுபாடுகளை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதோடு, கரம் சேர்த்து அதற்காக பாடுபட வேண்டும்.
இதற்கு முதற்கட்டமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் மரியாதை அளித்து அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான பணிகளை அரசும், தன்னார்வ அமைப்பகளும் செய்யவேண்டும். உயிர்களை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குற்றங்களை செய்யாமல், இந்த சமூகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நாடுகளின் வளர்ச்சிக்கும் பெரும் அவசியமாகிறது. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.
* உயர்ந்த நோக்கம் கொண்ட நாளிது
வயது, பாலினம், தேசியம், இனம், தோல் நிறம், உயரம், எடை, தொழில், கல்வி போன்றவற்றை வைத்து ஒரு மனிதனை எடை போடக்கூடாது. அதை பொருட்படுத்தாமல், கண்ணியத்துடன் அவரது முழுவாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். இதற்கு மனிதர்களுக்கான அனைத்து உரிமைகளும், அவர்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும். மொத்தத்தில் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் முடிவு கட்டி, உலகளாவிய ஒற்றுமை இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை இலக்காக கொண்டது இந்தநாள் என்றும் சமூக மேம்பாட்டு அமைப்புகள் பெருமிதம் தெரிவித்துள்ளன.
* சட்டப்படி குற்றமாகும்
பாகுபாடு என்பது ஒருவரை சமமின்றி நடத்துதல், பேதம் பார்த்தல், வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமாக நடத்துதல், ஓரவஞ்சனையாக இருத்தல் என்று பல்வேறு செயல்பாடுகளை குறிக்கிறது. இந்த பாகுபாடு என்பது ஜாதி, மதம், கல்வி, சுகாதாரம், பாலினம் என்று அனைத்திலும் தலைதூக்கி நிற்கிறது. ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயங்களால், அவரை நியாயமற்ற முறையில் நடத்துவதையே பாகுபாடு குறிக்கிறது. மனித உரிமைகள் சட்டம் தனிப்பட்ட குணாதிசயங்களின் அடிப்படையில், பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. இந்த வகையில் பாகுபாடு பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, இதை உணர்ந்து மக்கள் நடக்க வேண்டியதும் மிகவும் அவசியம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.