கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
கடலூர் : கெடிலம் ஆறு கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக வந்து பண்ருட்டி அருகே பிரிந்து கடலூர் மாவட்ட வங்கக்கடலில் கலக்கிறது. பருவ மழைக்காலத்தில் கெடிலம் ஆற்றில் நீர் வரத்து இருக்கும். இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார பகுதி பாசனத்திற்கும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கும் பயன்பட்டு வருகிறது.
மேலும் ஆற்றின் மூலம் நிலத்தடி நீர் மட்டமானது உயர்வதோடு, இதன் படுகையில் உள்ள நீர் நிலைகளும் நிரம்புகின்றன. மேலும் கம்மியம்பேட்டை முதல் அண்ணா பாலம் வரை ஆற்றின் கரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கரைகள் முற்றிலும் பராமரிப்பு இல்லாத நிலையில், கரையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதோடு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கழக்கிறது.
இதனால் ஆற்று நீர் அசுத்தமாகி, கரையோர பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் இருபுறம் மற்றும் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது.
திருவந்திபுரம் முதல் அண்ணா மேம்பாலம் வரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் முட்செடிகளும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி, கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தி கரைகளில் குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.