வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரழிவு ஏற்படும் அபாயம்; செப்டம்பரிலும் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்த மாதத்தில் இந்தியா கடுமையான மழைக்காலத்தை எதிர் கொள்ள உள்ளது.சில இடங்களில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக அதி கனமழை ஒரே நேரத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற பேரழிகள் ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதத்தில் வழக்கத்தை விட கூடுதல் மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர சராசரி மழைப்பொழிவு, கடந்த காலங்களை விட அதிகமாக இருக்கும். சராசரி மழைப்பொழிவான 167.9 மில்லி மீட்டரை விட 109 சதவீதம் அதிக கன மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இயல்பான மழைப்பொழிவை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்திய வானிலை மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபாத்ரா,‘‘ பலத்த மழையால் உத்தரகாண்டில் திடீரென வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும். பலத்த மழையால் அரியானா, டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் பாதிப்பு ஏற்படும்.
பெரும்பாலான ஆறுகள் உத்தரகாண்டில் உற்பத்தியாகின்றன. பலத்த மழையால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பெரு நகரங்கள், சிறிய நகரங்கள் பாதிக்கப்படும். சட்டீஸ்கரில் உள்ள மகாநதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யும்’’ என்றார்.