கல்லீரல் பாதிப்பு காரணமாக இயக்குனர் திடீர் மரணம்
சென்னை: சென்னையில்கல்லீரல் பாதிப்பு காரணமாக இயக்குனர் சுரேஷ் சங்கையா திடீர் மரணம் அடைந்தார். விதார்த், ரவீணா ரவி நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’, பிரேம்ஜி அமரன் நடித்த ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர், சுரேஷ் சங்கையா (41). கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு தனிஸ் பாத்திமா பக்கீர் என்ற மனைவியும், ஆதிரா என்ற பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
ஒரு மாதத்துக்கு முன்புதான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ‘சத்திய சோதனை’ படத்துக்குப் பிறகு செந்தில் நடித்த படத்தையும், யோகி பாபு நடித்த படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். இவ்விரு படங்களின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், திடீரென்று இயக்குனர் சுரேஷ் சங்கையா மறைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.