படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு
சென்னை: நாகப்பட்டினம் அருகே படபிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் தவறி விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி அளப்பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (52), காரை வேகமாக ஓட்டி வந்து, உயர பறந்து சென்று, தரையில் இறங்கும் காட்சி படமாக்கப்பட்டது. இதில் கார் விபத்துக்குள்ளாகவே, காரை ஓட்டிய ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இயற்கைக்கு மாறுபட்ட மரணம் என கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், சண்டை கலைஞர் வினோத், நீலம் தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது, உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் (125), வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்குதல் (289), கவனம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல் (106) (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கீழையூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.