நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல்லை செய்க: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப்பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் விவசாயிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், சாலை ஓரங்களில் நெல் மணிகளைக் குவித்து வைத்து, 15 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க போதிய இடவசதியும், சாக்குகளும் இல்லை என்பதால் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் காரணம் சொல்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வேளாண் தொழிலுக்காக குடும்ப நகைகளையும், சொத்துக்களையும் அடமானம் வைத்து, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி, அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டுவரும் நெல்மணிகள், மழையில் நனைந்து முளைவிட்டுவிடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
இப்படிபட்ட சூழலில், அரசு விழித்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.