டிஜிட்டல் கைது என்று மிரட்டல் ரூ.1.2 கோடியை இழந்த முதியவர் அதிர்ச்சியில் பலி
புனே: மகாராஷ்டிராவில் டிஜிட்டல் கைதுக்கு ஆளாகி ரூ.1.2 கோடியை இழந்த முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா, புனேயில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி(83) ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவருடைய மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் முதியவரை தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார்.
மும்பை சைபர் குற்ற பிரிவு அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த அந்த நபர், தனியார் விமான நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயல் சம்மந்தப்பட்ட பண மோசடி வழக்கை விசாரித்து வருவதாகவும், அதில் முதியவரின் வங்கி கணக்கு, ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அவரின் இந்த குற்றச்சாட்டை முதியவர் மறுத்துள்ளார். அதன் பின்னர் ஐபிஎஸ் அதிகாரி விஜய் கன்னா, சிபிஐ அதிகாரி தயா நாயக் என அறிமுகப்படுத்தி கொண்டு பேசிய இரண்டு பேர் இந்த மோசடி வழக்கில் இருந்து விடுபட வேண்டுமானால் பணம் தர வேண்டும்.
இல்லாவிட்டால் கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்படுவார்கள் என மிரட்டியுள்ளனர். இருவரையும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி பல மணி நேரம் அவர்களை வீடியோ அழைப்பில் பேசி கண்காணித்தபடி இருந்துள்ளனர். வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதாக கூறிய மோசடி நபர்கள் முதியவரின் வங்கி கணக்கில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை ரூ.1.2 கோடியை எடுத்துள்ளனர்.விசாரணையில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாவிட்டால் பணத்தை திரும்ப தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின் அவர் மனைவி சைபர் குற்ற பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.