டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு
சென்னை: சமூகவலைத்தளத்தில் டிஜிட்டல் வன்முறையால் 85% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்னும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 85% சதவீதம் பெண்கள் சமூக வலைத்தளம் உள்ளிட்ட ஆன்லைன் வன்முறையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி கோவிட் தொற்றுக்குப் பிறகு பெண்களுக்கு எதிராக சைபர் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பெண்கள் மீதான ஆன்லைன் துன்புறுத்தல், வெறுப்பூட்டும் பேச்சு, புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல், ஆன்லைனில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஆபாசமான விஷயங்களை அனுப்புதல் உள்ளிட்டவை டிஜிட்டல் வன்முறையின் ஒரு பகுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் குறிப்பாக பதின்ம வயது பெண்களே அதிகம் சிக்கி வருகின்றனர். இது அவர்களது மனநலனை வெகுவாக பாதிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் புகார் அளித்தால், சைபர் கிரைம் சட்டம் மூலம் அவர்களை டிஜிட்டல் வன்முறையில் இருந்து பாதுகாக்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.