டிஜிட்டல் கணக்கெடுப்பு
நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் ெதாகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்படி கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் ெதாகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் மேற்கொள்ள ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தயாராகி இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு திட்டமிடுதல், நிதி ஒதுக்குதல், சலுகைகள், நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒவ்வொரு மாநில அரசும், ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசும் மேற்கொள்ள முடியும். தமிழ்நாடு உ்ள்பட அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சமுதாய மக்கள் தொகையை அறிந்து கொள்ள தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இது மாநில அளவில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள், சலுகைகள் வழங்க அரசுக்கு துணை புரியும்.
இந்நிலையில், 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக அலுவலர்களை நியமிக்க வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு காலக்கெடு விதித்துள்ளது. 2027ம் ஆண்டு கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதிவாரி விவரங்களை உள்ளடக்கவும் ஒன்றிய அமைச்சரவை குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. சுமார் 30 லட்சம் களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த மெகா கணக்கெடுப்பு பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் இந்தியப் பதிவாளர் ஜெனரல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை தேர்வு செய்யும் பணிகளை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் ‘ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது அரசு அதிகாரிகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம்; ஆறு கணக்கெடுப்பாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என்ற விகிதத்தில் நியமனம் செய்ய வேண்டும். இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. களப்பணிக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். முதற்கட்டமாக வீடுகளைப் பட்டியலிடும் பணி வரும் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதத்திலும் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் எஸ்ஐஆர் சரிபார்ப்பு பணியையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியையும் ஒன்றே என்று குழப்பி கொள்ளக்கூடாது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டில் உள்ள மொத்த உறுப்பினர்கள், வயதானவர்கள், பட்டதாரிகள், வேலைக்கு செல்வோர், மதம், வகுப்பு ஆகியவற்றை பதிவு செய்வார்கள். எனவே வீடு தேடி வரும் களப்பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுப்பது நமது கடமை. இதன் மூலம் நாடும், மாநிலமும், வீடும் நலம் பெறும் என்ற விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும்.