டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடி குழுக்கள் இணைந்து விரிக்கும் வலை: உத்தரவுகள் பிறப்பிக்க ஆயத்தமாகும் உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட பணத்தின் பயன்பாடு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரத்தில் டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதில் சிபிஐ உள்ளிட்ட உயரதிகாரிகளை போல், வீடியோ காலில் பேசி, டிஜிட்டல் முறையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டதாக கூறி, லட்சக்கணக்கில் மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி சமீப ஆண்டுகளாக பூதாகரமாகியுள்ளது.
இந்த மோசடி பெரும்பாலும் நிதி இழப்புகளையே ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது உயிரிழப்புக்கும் வழிவகுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓய்வு பெற்ற 83 வயது அரசு அதிகாரி ஒருவர், இதற்கு பலியாகி உள்ளார். டிஜிட்டல் மோசடியில் ரூ.1.2 கோடி பணத்தை இழந்த அதிர்ச்சியில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. இந்தநிகழ்வு நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் முதியவர்களே அதிகளவில் குறிவைத்து ஏமாற்றப்படுகின்றனர். இது பெரும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற மோசடியாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒன்றிய அரசு ஒடுக்கவேண்டும். இது தொடர்பாக விரைவில் உரியஉத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்பது இது ஒரு தனிநபரால் நடத்தப்படும் மோசடி அல்ல. இது உலகளவில் செயல்படும் பல மோசடி குழுக்கள் இணைந்து விரிக்கும் வலை என்று சர்வதேச சைபர்கிரைம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இணையதள குற்றங்கள் சார்ந்த ஆய்வுமைய நிர்வாகிகள் கூறியதாவது: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைப்பார்கள். அதை வைத்து மக்களுக்கு மிரட்டல் விடுப்பார்கள். மேலும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி அழைப்பு வழியே தொடர்பு கொள்வார்கள். பெரும்பாலும் இந்த அழைப்புகள் இணையவழியில் மேற்கொள்ளப்படும். பின்னர் வீடியோ அழைப்பில் இணையுமாறு சொல்வார்கள். பெரும்பாலும் நிதிமுறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். பின்னர் கைது செய்வதற்கான வாரண்ட் இருப்பதாக மறுமுனையில் இருப்பவரை மோசடியாளர்கள் மிரட்டுவார்கள். அவர்கள் மோசடியாளர்கள் என்பதை கொஞ்சம் கூட, அடையாளம் காணமுடியாத வகையில் செயல்பாடுகள் அனைத்தும் தொழில்முறை நேர்த்தியுடன் இருக்கும். இதன்மூலம் அவர்கள் அசல்அதிகாரிகள் என்பதை நம்பச்செய்து விடுவார்கள்.
பின்னர் இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க நாங்கள் உதவுகிறோம் என்று சொல்வார்கள். வழக்கில் இருந்து பெயரை நீக்க, விசாரணை நேரத்தில் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளிப்பார்கள். இதற்காக குறிப்பிட்ட வங்கிக்கணக்கு அல்லது யுபிஐ மூலம் பணம் அனுப்பச்சொல்வார்கள். பணத்தை பெற்றதும் அவர்களை எந்தவகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. அதன்பிறகே பாதிக்கப்பட்டவர்கள், மோசடியாளர்களிடம் பணத்தை இழந்துவிட்டோம் என்பதை அறிய முடியும். இந்த டிஜிட்டல் கைது மோசடி பெரும்பாலும் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், கனடா போன்ற பிறநாடுகளில் உள்ள சைபர் குற்றவாளிகளின் அதிநவீன வலைப்பின்னல் மூலம் செயல்படுகிறது.
இதில் இந்தியாவில் உள்ள நொட்ஒர்க்குகளின் பெரும்ஆதரவோடு நிகழ்கிறது. இந்த மோசடிகளின் போது பின்னணியில் அடிக்கடி காணப்படும் ஸ்டூடியோக்கள், இந்திய காவல் நிலையங்களை போல் தோற்றம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை வெளிநாடுகளில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மோசடியாளர்கள், இப்போது ‘சிப்’ஐ நம்பியுள்ளனர்.
இதனால் அவை முறையான இந்திய எண்களில் இருந்து அழைப்பு வருவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த பரவலாக்கப்பட்ட அமைப்பு, சட்டஅமலாக்கத்திற்கு முழுமையான ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கு சவாலாக அமைகிறது. இப்படி மோசடி செய்பவர்கள் அரைமணி நேரத்திற்குள் லட்சம் அழைப்புகளை செய்யும் வகையில் இணைய பயன்பாட்டை வைத்திருக்கும் அதிர்ச்சி தகவலும் சைபர்கிரைம் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
‘‘பொதுவாகவே மோசடிகளில் இருந்து தப்பிக்க, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதிலும் இணையவழியில் இயங்குவோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசின் விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரு போதும் பணம் அல்லது வங்கிக்கணக்கு சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள் என்பதை உணரவேண்டும். விசாரணை அதிகாரி என்று பேசுபவர் மீது சந்தேகம் இருந்தால் உடனடியாக அவர் குறிப்பிடும் துறை சார்ந்த அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டுப் பெறவேண்டும். அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப், ஸ்கைப் போன்றவற்றை தொலைத் தொடர்புக்கு பயன்படுத்துவதில்லை என்பதையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். மோசடி என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக உள்ளூர்போலீசாரையோ அல்லது சைபர் கிரைம் போலீசாரையோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டியதும் முக்கியம். இதுபோன்ற செயல்களால் டிஜிட்டல் மோசடி அவலங்களில் இருந்து பெருமளவில் மக்கள் தப்பிக்கலாம்,’’ என்பதும் ஆய்வாளர்களின் அறிவுரை.
உடனடியாக செய்ய வேண்டியது
டிஜிட்டல் மோசடி மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பணத்தை இழந்து விட்டால், உடனடியாக தங்களது வங்கியை தொடர்பு கொண்டு கணக்கை முடக்க வேண்டும். தொலைபேசி அழைப்பு விபரங்கள், பணப்பரிவர்த்தனை சார்ந்த விவரங்கள், மெசேஜ்கள் என்று தங்கள் வசமுள்ள அனைத்து ஆதாரங்களையும் பத்திரப்படுத்த வேண்டும். உடனடியாக cybercrime.gov.in என்ற தேசிய சைபர்கிரைம் தளத்திலும் புகார் அளிக்கலாம். மேலும் தடுமாற்றங்கள் இருந்தால் வழக்கறிஞர்களின் உதவியை நாடுவதும் நல்லது. மிகவும் முக்கியமாக செல்போனில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் முதலில் பதற்றத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். காணொலி வாயிலாக விசாரணை மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை அரசு எப்போதும் மேற்கொள்ளாது என்ற அடிப்படை சிந்தனை நமக்குள் இருப்பதும் மிகவும் அவசியமானது என்கின்றனர் சைபர்கிரைம் வல்லுநர்கள்.
ரூ.1000 கோடி மோசடி
டிஜிட்டல் கைதுகளால் இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாடுமுழுவதும் ரூ.3ஆயிரம் கோடி திருட்டு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ெதரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 முதல் 2024ம் ஆண்டுவரை மட்டும் இதுதொடர்பாக 1லட்சத்து 23ஆயிரம் வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 3மடங்கு அதிகம் என்றும் ஒன்றிய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 3மோசடிகள் குறித்த வழக்குகள் இந்தியாவில் அதிகளவில் பதிவாகியுள்ளது. முதலீட்டு மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், பாஸ்மோசடிகள் என்று இது வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் மோசடியில் மட்டும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.