பகடைக்காய்
10வது நாள் கூட்டத்தொடர், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் பீகார் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் மக்கள் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் குரல் எழுப்பும்போது, அவர்களை சிஐஎஸ்எப் வீரர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ற சர்ச்சை, நடப்பு கூட்டத்தொடரில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை துணைத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களது உரிமையான ஜனநாயக போராட்டத்தை பயன்படுத்துகின்றனர். அப்போது சிஐஎஸ்எப் வீரர்கள் அவைக்குள் ஓடிவந்து தடுக்கின்றனர். இது எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. 2 நாட்களாக இதை பார்க்கும்போது நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்,’’ என்று தெரிவித்துள்ளார்.
‘மாநிலங்களவை தலைவராக இருந்து ராஜினாமா செய்துள்ள ஜெகதீப்தன்கரின் அறையை தற்போது சிஐஎஸ்எப் வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று காங்கிரஸ் கொறடா ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘மாநிலங்களவைக்குள் சிஐஎஸ்எப் வீரர்கள் அனுமதிக்கப்பட்டது, இதுவரை வரலாற்றில் நடந்திராத ஒன்று,’’ என்று திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஆனால் இந்த விவகாரம் குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘அவையில் பாதுகாப்பு வீரர்களை நிறுத்தியது ஒன்றிய அரசின் முடிவல்ல. அது சம்பந்தப்பட்ட இரு அவைகளின் தலைவர்கள் எடுத்த முடிவு. இதுதொடர்பாக அவைத்தலைவருடன் விவாதிக்கப்படும்,’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மர்மநபர்கள், அவையில் வண்ணப்புகையை தூவி கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்திற்கு பிறகே, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சிஐஎஸ்எப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்களின் மனதை பிரதிபலிக்கும் எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இதற்கான நோக்கம். அப்படி பாதுகாக்க வந்தவர்களை பகடைக்காயாக மாற்றி, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க நினைக்கிறது ஒன்றிய அரசு என்பதே உண்மை. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.