நடிகர் அர்ஜுன் கபூரை பிரிந்த நிலையில் 33 வயது வைர வியாபாரியுடன் 52 வயது நடிகை மலைக்கா நெருக்கம்?.. மும்பையில் ஒன்றாக வலம் வருவதால் பரபரப்பு
மும்பை: பிரபல நடிகை மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூருடனான பிரிவுக்குப் பிறகு தற்போது இளம் வைர வியாபாரி ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மலைக்கா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதுகுறித்து திரைப்பட விழா ஒன்றில் பேசிய அர்ஜுன் கபூர், நான் தற்போது சிங்கிளாக இருக்கிறேன்’ வெளிப்படையாக அறிவித்து இருவருக்கும் இடையிலான பிரிவை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், 52 வயதான மலைக்கா அரோரா தற்போது தன்னைவிட 19 வயது இளையவரான ஹர்ஷ் மேத்தா என்ற 33 வயது வைர வியாபாரியுடன் நெருங்கி பழகி வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வயது வித்தியாசம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தகவல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இருவரும் மும்பையில் பல்வேறு இடங்களில் ஒன்றாகச் சுற்றித் திரிகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு ஒன்றாக வெளியேறினர். அதனைத் தொடர்ந்து, கடந்த 26ம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருவரும் மீண்டும் ஒன்றாகக் காணப்பட்டனர். புகைப்படக் கலைஞர்களிடம் சிக்குவதை தவிர்க்க தனித்தனியாக நடந்து சென்றாலும், கார் நிறுத்துமிடத்தில் இருவரும் ஒரே காரில் ஏறிச் சென்றது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்த நபர் மலைக்காவின் மேலாளராகக் கூட இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மலைக்கா அரோராவோ அல்லது ஹர்ஷ் மேத்தாவோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.