டயமண்ட் லீக் தடகளம்: ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ்
ஜூரிச்: சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உலக தடகள டயமண்ட் லீக் பைனல் போட்டி நடக்கிறது. அதில் இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் களமிறங்கினார். 5 வாய்ப்புகளில் 3ல் அவர் தவறு இழைத்தார். எஞ்சிய 2 வாய்ப்புகளில் அதிகபட்சமாக 85.01 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார். அதனால் வெள்ளிப் பதக்கத்தை நீரஜ் வசப்படுத்தினார்.
அதிகபட்சமாக 91.51 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடம் பிடித்து, தங்கத்தை கைப்பற்றினார். அவர் முதல் 2 முயற்சிகளிலேயே 91 மீட்டருக்கு மேல் வீசியதால் அடுத்து வீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நீரஜ் சோப்ரா தனது விளையாட்டு வாழ்க்கையில் அதிகபட்சமாக 90.23 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்துள்ளார். இப்போட்டியில், டிரினிடாட் டொபாகோவைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கெஷோர்ன் வால்காட் 84.95 மீட்டர் தொலைவு ஈட்டியை எறிந்து 3வது இடம் பிடித்ததால் வெண்கலம் கிடைத்தது.