நீரிழிவு நோய்க்கான முழு சிகிச்சை அளிக்க மெட்டபாலிக் வெல்நஸ் மையம்: காவேரி மருத்துவமனையில் தொடக்கம்
சென்னை: நீரிழிவு நோய்க்கான முழு சிகிச்சை அளிக்க மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வு காண்பதற்கான ஒரு முழுமையான மையமாகும்.
நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் மருத்துவமனையின் வருடாந்திர பொது விழிப்புணர்வு முயற்சியான ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’-ன் 7வது பதிப்பின் போது இந்த தொடக்க விழா நடைபெற்றது. இந்த மையத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர். ஐசரி கணேஷ் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு மருத்துவர் பரணிதரன் கூறியதாவது:
பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தனித்தனி பிரச்சனைகளாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து, அதாவது மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலிருந்தே உருவாகின்றன. இந்த மையத்தின் மூலம், நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பகட்ட சிகிச்சைகளை வழங்குவதையும், சிக்கல்கள் உருவாவதற்கு முன்பே தனிநபர்கள் தங்கள் வளர்சிதை மாற்றம் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.