பிரபலமாக இருக்கும் தோனி உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்ற நடைமுறை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது : ஐகோர்ட் கருத்து
சென்னை : பிரபலமாக இருக்கும் தோனி உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்ற நடைமுறை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்ய தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பல்வேறு பிரபலங்கள் நீதிமன்றத்திற்கு வரும் போது தோனிக்கு மட்டும் என்ன சிக்கல் ? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்து தோனி சட்டத்தை பின்பற்றுவதில்லை எனவும் கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தோனி ஒரு தேசிய அளவிலான பிரபலமாக இருக்கக்கூடிய கிரிக்கெட் வீரர். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்தனர். வழக்கறிஞர் ஆணையர் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சம்பத்குமாரோ அல்லது அவரது வழக்கறிஞரோ இருப்பார்கள் என்பதால் அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனக்கூறிய நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் நியமித்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.