தோலாவிராவிலிருந்து டிஜிட்டல் இரட்டையர்கள் வரை: இந்தியாவின் நீர் வளத்தைப் பாதுகாத்தல்
தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் ஆரம்பித்தபோது, இயற்கை ஒரு மாபெரும் ஈவுத்தொகையை வழங்கியதுபோல உணர்ந்தோம் - இந்தியாவின் ஆண்டு மழையளவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஒரே காலாண்டில் வந்துவிட்டது.
ஆயினும், பிப்ரவரிக்குள், அதே பழக்கமான கவலை தரும் செய்திகள் மீண்டும் வந்துவிட்டன - மராத்வாடாவில் டேங்கர் லாரிக்காகக் காத்திருக்கும் வரிசைகள், பெங்களூருவில் வறண்ட குழாய்கள், மற்றும் டெல்லி நகராட்சிகளின் பதற்றம். எளிமையாகச் சொன்னால், நீரின் பெருக்கம் (Abundance), உத்தரவாதமாக (Assurance) மாறவில்லை. இந்தியாவின் நீர் வளத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அதாவது, தொழில் 4.0-இன் அதிநவீனக் கருவிகளையும் நமது முன்னோர்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை அறிவையும் இணைக்க வேண்டும்.
தொன்மையின் நீர்ப் பாடங்கள்;
சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்ச் வளைகுடாவில் உள்ள உவர்நிலத் தீவில் செழித்திருந்த சிந்து-சரஸ்வதி நகரமான தோலாவிராவை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். அங்கே, நீரின் வேகத்தைக் குறைக்கவும், வெள்ள நீரைச் சுத்திகரித்துத் தேக்கவும் வடிவமைக்கப்பட்ட, ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்ட 16 நீர்த்தேக்கங்களைதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர்.
அதற்குப் பின், 2,000 ஆண்டுகள் கழித்து, மௌரியப் பொறியாளர்கள் பீகார் மற்றும் வங்காளத்தின் மலைகளில் மழைநீர் வாய்க்கால்களை வெட்டினார்கள். சோழ மற்றும் பாண்டிய ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்த ஆற்றுப் படுகைகளையும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஏரிக் கட்டமைப்புகளாக மாற்றினார்கள். மேலும், குஜராத்தில் உள்ள உள்ளூர்ச் சிற்பிகள், இன்றும் நன்னீரைத் தக்கவைத்துள்ள படிக்கிணறுகளைப் (Step-wells) பாங்குற உருவாக்கினர். இவையனைத்தும் எந்தவிதமான செயற்கைக்கோள் படங்களோ அல்லது LiDAR (லேசர் ஒளி கண்டறிதல் மற்றும் எல்லை அளவீடு) போன்ற தொழில்நுட்பங்களோ இல்லாமல் சாதிக்கப்பட்டன.
இன்று நம்மிடம் நுண் உணர்விகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வெள்ள முன்னறிவிப்பு முறைமைகள், மற்றும் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் நீர்நிலைகள் குறித்த தரவுகளைப் புதுப்பிக்கும் பூமி கண்காணிப்பு விண்மீன் கூட்டங்கள் உள்ளன. ஆயினும், நிலத்தடி நீரும், மழைநீர் ஓட்டமும் வீணாவது தொடர்கிறது. இதற்குக் காரணம், ஒவ்வொரு துளியையும் அமிர்தமாகக் கருதிய நமது நாகரிகத்தின் நினைவிலிருந்து விலகி, இந்த நவீனக் கருவிகளை நாம் தனித் தீவுகளாகப் பயன்படுத்துகிறோம்.இதைக் களைய, தொழில்நுட்பத்துடன் பாரம்பரியம் பின்னிப் பிணைந்த ஒரு மூன்று அம்சத் தீர்வை நான் முன்வைக்கிறேன்:
தீர்வின் மூன்று அணுகுமுறைகள்;
1. வரலாற்று நீர்ச் சொத்துகளின் ‘டிஜிட்டல் இரட்டையர்கள்’
ஹம்பியின் புஷ்கரணி (படிக் குளம்) போன்ற சின்னமான நீர்நிலைகள் ஒவ்வொரு ஒன்றுக்கும், அடையாளம் தெரியாமல் தூர்ந்துபோன நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன.
ஒரு தேசிய அளவிலான லேசர்-ஸ்கேன் பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம், ஒரு வருடத்திற்குள் அனைத்து வரலாற்று நீர்ச் சொத்துகளுக்கும் ஒரு ‘டிஜிட்டல் இரட்டையை’ (Digital Twin) உருவாக்க முடியும். இதன் செலவு ஒரு நடுத்தர அணையைக் கட்டுவதற்கான செலவிற்குச் சமமாகத்தான் இருக்கும். இது, புத்துயிரளிக்கத் தகுந்தஅனைத்து நீர்க் கட்டமைப்புகளையும், பயன்பாடு அற்றுப் பணி ஓய்வுபெற வேண்டியவற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்.
2. நவீனத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் கூடிய புனரமைப்பு
புத்துயிரளிக்கப்பட்ட ஏரிகள், நகர்ப்புற வெள்ளத்தின் உச்சத்தை 30 சதவீதம் வரை குறைக்கக்கூடிய ‘முதல் வெள்ளத் தடுப்புக் கிடங்குகளாக’ (First-flush buffers) செயல்பட முடியும்.
ஒரு சோழர் காலத்து ஏரி, களிமண் கரையைப் பயன்படுத்திப் பருவமழையின் வேகத்தைக் குறைத்தது. அதன் நவீன வடிவத்தில், IoT குழாய்க் கதவுகளை (IoT conduit gates) சேர்க்க முடியும். செயற்கைக்கோள் மண் ஈரப்பதக் குறியீடுகள் நிலத்தடி நீர் ஏற்கத் திறன் உள்ளதைக் காட்டும் போது, இந்தக் கதவுகளை தொலைவிலிருந்து திறந்து, நீரை நிலத்தடி நீர் வளத்தில் (aquifers) துல்லியமாகச் செலுத்த முடியும். குப்தர் காலத்துப் படிக்கிணறுகள் வழங்கிய வெப்பப் பாதுகாப்பு போல, இன்று அதே அமைப்புகளில் புற ஊதா LED-க்களை (Ultraviolet LEDs) நிறுவுவதன் மூலம், மிகக் குறைந்த ஆற்றல் செலவில் சேமிக்கப்பட்ட நீரை சுத்திகரிக்கவும் முடியும்.
இதன் அடிப்படைக் கொள்கை மாறாதது: ஈர்ப்பு விசையை மதிப்பது, நீர் இறைப்பைக் குறைப்பது, மற்றும் தொழில்நுட்பம் கடினமான வேலையைச் செய்ய அனுமதிப்பது.
3. நுகர்வோர் அல்ல, பங்குதாரர்கள் ஆக்குதல்
இறுதியில், நீர் பாதுகாப்பு என்பது ஒரு கலாச்சாரப் பிரச்சினை. நமது முன்னோர்கள் ஏரிகளையும் படிக்கிணறுகளையும் மதித்தார்கள், ஏனெனில் அந்த மரியாதை, நீரைக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டுப்பாட்டைஅவர்களுக்குக் கொண்டுவந்தது.
இன்று, நடத்தை சார்ந்த தூண்டுதல்கள் (Behavioural nudges) அதையே செய்ய முடியும் -
* சேமிப்பிற்குப் பணம் திரும்ப அளிக்கும் மாறுபடும் கட்டண முறை.
* நீரைப் பாதுகாக்க அக்கம்பக்கத்தினர் போட்டியிடும் விளையாட்டுமயமாக்கப்பட்ட செயலிகள்.
* குடிநீர்ப் பயன்பாட்டை, நிலத்தடி நீர் நிரப்பலுக்கு எதிராக உடனுக்குடன் காட்டும் திறமையான மீட்டர்கள்.
இது அனைத்துக் குடிமக்களையும் நுகர்வோர் நிலைக்குப் பதிலாகப் பங்குதாரர்களாக மாற்றுகிறது. சமூகப் பெருமையுடன் டிஜிட்டல் வெளிப்படைத்தன்மையை இணைப்பதன் மூலம், கார்பனைக் காப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு நீரைக் காப்பதும் அவசியமானதாகக் கருதப்படும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்க முடியும்.
வெற்றிக்கான தொலைநோக்கு (2030)
வெற்றி எப்படி இருக்கும்? 2030-ஐ எண்ணிப் பார்ப்போம்: மும்பையில் ஏற்படும் மேகவெடிப்பு, சீரமைக்கப்பட்ட போர்ச்சுகீசியர் காலத் தொட்டிகளில் உள்ள தானியங்கி வாயில்களைத் திறக்கிறது. அவற்றிலிருந்து வெளியேறும் அதிகப்படியான நீர், சீரமைக்கப்பட்ட மௌரியர் காலத்திய வழிகள் வழியாகத் தானேயாக, தாணேயின் கருங்கல்லுக்கு அடியில் உள்ள நிலத்தடி 'நீர்ப் வங்கிகளுக்கு' (Subsurface water banks) சென்று சேமிக்கப்படுகின்றன. மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த குடிநீர், முன்னர் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்திருந்த வீடுகளுக்குத் தேவைப்படும்போது மேலேற்றப்பட்டு வழங்கப்படுகிறது. மழைகள் தொடர்ந்து பெய்யும் - அந்த நீரையும் தக்கவைத்துக்கொள்வது, நம் அடுத்த தலைமுறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையாகும் என யசோவர்தன் அகர்வால் (வெல்ஸ்பன் BAPL நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சின்டெக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்) தெரிவித்தார்.