தர்மஸ்தலாவில் 13வது இடம் இன்று தோண்ட எஸ்ஐடி திட்டம்
பெங்களூரு: தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டுப்பகுதிக்குள் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகிறது. சடலங்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டு, அதில் 12 இடங்களில் தோண்டும் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு உடலின் சில எலும்புகளும், ஒரேயொரு மண்டையோடும் மட்டுமே கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே, பங்காளகுட்டே காட்டுப்பகுதியில் 14வது இடத்தில் தோண்டப்பட்ட நிலையில், அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. 11வது இடத்திற்கு அருகே புகார்தாரர் காட்டிய 11ஏ இடத்திலும் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை பெரியளவில் எதுவுமே கிடைக்காத நிலையில், 13வது இடத்தில் நேற்று தோண்டுவதாக இருந்தது. ஆனால் நேற்று அங்கு தோண்டப்படவில்லை.
ரேடார் கருவி உதவியுடன் இன்று சோதிக்கப்பட்டு, பின்னர் தோண்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று எஸ்.ஐ.டி தலைவர் பிரணாவ் மொஹந்தி தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எஸ்.ஐ.டி மேற்கொண்டுவரும் விசாரணை பணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தர்மஸ்தலாவில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.