தர்மஸ்தலா மலைப்பகுதியில் மனித எலும்புகள் சிக்கியது: எஸ்ஐடி தீவிர விசாரணை
பெங்களூரு: தர்மஸ்தலாவில் 11வது இடத்தில் தோண்டுவதை நிறுத்திவைத்து புகார்தாரர் காட்டிய மலைப்பகுதியில் தோண்டிய போது மனித எலும்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைத்ததாக கோயில் முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் எஸ்ஐடி குழுவினர் புகார்தாரர் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அடையாளம் காட்டிய 15 இடங்களில் இதுவரை 10 இடங்களை தோண்டி சோதனை செய்தனர்.
அதில் 6வது இடத்தில் மனித எலும்புகள் சிக்கின. இதையடுத்து நேற்று நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள 11, 12, 13 ஆகிய இடங்களை தோண்டி சோதனை செய்ய ஆயத்தப்பணிகளை எஸ்ஐடி குழு மேற்கொண்டது. ஆனால் புகார்தாரர் திடீரென பெலதங்கடி தாலுகா பங்களா குட்டே என்ற மலைப்பகுதிக்கு அழைத்து சென்று ஒரு இடத்தை அடையாளம் காட்டினார். உடனே எஸ்ஐடி குழுவினர் முன்னர் அடையாளம் காட்டிய 11,12,13 இடங்களில் தோண்டும் பணிகளை நிறுத்திவைத்து 20 கூலி தொழிலாளர்கள் உதவியுடன் பங்களாகுட்டே மலைப்பகுதியில் ேசாதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மனித எலும்புகள் சிக்கியது. அதை சேகரித்த எஸ்ஐடி குழுவினர் அதை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.