தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைத்ததாக நான் சொன்னது பொய் நீதிபதியிடம் புகார்தாரர் ஒப்புதல்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் அருகே பல பெண்களின் உடல்கள் மர்மமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாக சின்னய்யா என்பவர் புகார் செய்தார். இது பற்றி விசாரிக்க கூடுதல் போலீஸ் டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. புகார்தாரர் சின்னய்யா கொடுத்த புகார் மற்றும் அவர் காட்டிய 17 இடங்களில் உடல்கள் தோண்டும் பணி 20 நாட்கள் நடத்தப்பட்டது.
ஆனால் புகார்தாரர் கூறியபடி எந்த பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டதற்கான தடயமும் கிடைக்கவில்லை. பல கோடி செலவு செய்தும், உண்மையான சம்பவம் உறுதியாகாமல் இருந்ததால், வேறு வழியில்லாமல் புகார் கொடுத்த சின்னய்யாவை சிறப்பு புலனாய்வு படையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கைது செய்தனர். பெல்தங்கடி கூடுதல் தாலுகா சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எச்.விஜயேந்திரா முன் சின்னய்யா ஆஜர்படுத்தினர்.
அப்போது தர்மஸ்தலாவில் பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார் கொடுக்கும்படி சிலர் என்னை தூண்டி விட்டனர். அவர்கள் பேச்சை கேட்டு நான் பொய் புகார் கொடுத்தேன். என்னை மன்னித்து விடுங்கள். என்று வாக்குமூலம் அளித்தார். இதனிடையில் இப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இந்து அமைப்பை சேர்ந்த மகேஷ்ஷெட்டி திமரோடி, புகார்தாரர் சின்னய்யாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, நேற்று உடுப்பில் உள்ள அவரது வீட்டில், எஸ்ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.