‘தர்மபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் 1616 பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1.62 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முழுவதும், நேற்று நடந்த ‘தர்மபுரி வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சியில் 1616 பள்ளி, கல்லூரிகளில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 710 மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7ம் ஆண்டு தர்மபுரி புத்தகத்திருவிழா வரும் 26ம்தேதி தொடங்க உள்ளது.
இதையொட்டி, கல்லூரி மாணவிகள், பங்கேற்ற ‘தர்மபுரி வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சதீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ‘தர்மபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சி நடந்தது.
அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம், புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டு சேர்ப்பது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். புத்தகங்கள் மூலம் நாம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும், புதிய விஷயங்களை அறியலாம், மேலும் உலகை வேறு கோணங்களில் பார்க்க முடியும். புத்தகங்கள் நம்மை சிறந்த மனிதர்களாக மாற்றுகிறது. சிறப்பான வாழ்க்கைக்கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி மிக அவசியம்.
மாணவ பருவம் என்பது ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தப்பட வேண்டிய பருவமாகும். அவ்வாறு நல்வழிப்படுத்த கல்வி மட்டுமே சிறந்ததாக இருக்கும். அதற்கு புத்தகங்களை படிப்பது மிக மிக அவசியம். நவீன செல்போன்களும் சமூக ஊடகங்களும் சாதாரணமாகி உள்ள இன்றைய சூழலில், அவற்றுக்கு அடிமையாகி விடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
படிப்பறிவு ஒரு மனிதனுக்கு சிறந்த மன நிலையை உருவாக்கும். வாசிப்புப் பழக்கம் ஒவ்வொருவரையும் நல்வழிப்படுத்தி அவர்களை நல்லவர்களாக உருவாக்க துணை நிற்கும். படிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
எனவே, அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து, அறிவுசார் புத்தகங்களை வாங்கி, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நடந்த ‘தர்மபுரி வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் 1,616 பள்ளி, கல்லூரிகளில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 710 மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகங்கள் வாசித்தனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, தகடூர் புத்தகப்பேரவை தலைவர் சிசுபாலன், காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் (பொ) ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.