தர்மபுரி கூட்ஸ் ஷெட்டில் ரூ.18.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்
*விரைவில் பணிகள் தொடக்கம்
தர்மபுரி : தர்மபுரி ரயில் நிலையம் கூட்ஸ் ஷெட்டில் ரூ.18.50 கோடியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
தர்மபுரி ரயில்நிலையம் வழியாக சேலம்- பெங்களூரு, பெங்களூரு- சேலம் மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 20க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தர்மபுரி ரயில் நிலையத்தை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 1974ம் ஆண்டு, தர்மபுரி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. சரக்குகளை கையாளுவதற்காக தனியாக ரயில்பாதை அமைக்கப்பட்டது. தற்போது, இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு ரயில் பாதையில் சரக்கு ரயில்களை நிறுத்தி, லாரிகளில் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. 48 ஆண்டிற்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையில், சரக்குகள் கொண்டு வருவதற்கு மலைப்பாதையின் வழியாக சிரமமாக இருந்தது.
நீராவி இன்ஜின் மூலம் ஒரு பெட்டியில்(1 வேகன்) தர்மபுரி ரயில்நிலையத்திற்கு சரக்கு கொண்டு வரப்பட்டது. மாரண்டஅள்ளியைச் சேர்ந்த ஒரு வியாபாரி, வடமாநிலத்தில் இருந்து பருப்பு, துடைப்பம், ஆரியம் ஆகியவற்றை தருவித்து இறக்கி, மாவட்டம் முழுவதும் சப்ளை செய்தார்.
இரண்டு நாளைக்கு ஒரு ரயில் பெட்டியில் சரக்கு வரும். பின்னர், 12 பெட்டியாக அதிகரித்து, 15 பெட்டி, 16 பெட்டியாக உயர்த்தப்பட்டது. 1996ம் ஆண்டு அகல ரயில்பாதையாக தர்மபுரி வழி ரயில்பாதை மாற்றப்பட்டது. அதன் பின், டீசல் இன்ஜின் பொருத்திய சரக்கு ரயில் 42 பெட்டிகளுடன் வரத்தொடங்கின. அது இப்போது வரை நீட்டிக்கிறது.
தர்மபுரி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் டெல்டா மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளும், குஜராத், மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து கோதுமை, பச்சரிசி மூட்டைகளும் கொண்டு வரப்படுகின்றன. ஆரம்பத்தில் மிக குறைந்த அளவில் சரக்குகள் கையாளப்பட்டன.
தற்போது ஆண்டுக்கு 2.50 லட்சம் டன் சரக்குகள் இறக்கி- ஏற்றி கையாளப்படுகின்றன. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த சரக்கு ரயில்களை நம்பி லாரி உரிமையாளர், டிரைவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், நெல் அரவை ஆலை உரிமையாளர், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
ஆனால், சரக்குகள் இறக்கி லாரிகளில் ஏற்றும் இடங்கள் திறந்த வெளியாகவே உள்ளது. இதனால், மழை காலங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கு சிரமமாக உள்ளது. உணவு பொருட்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலை காணப்படுகிறது.
மேலும், சரக்கு கையாளும் இடத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மூட்டை தூக்கும் தொழிலாளர்களும், லாரி ஓட்டுனர்களும் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின்விளக்குகளும் சரியாக எரிவதில்லை.
இந்நிலையில், சரக்கு முனையத்தில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை வசதி, 6 இடங்களில் மின்கோபுர விளக்கு, ரயில் வரும் இடங்களை கண்டறியும் பாய்ஸ் ரூம், கூட்ஸ் முகவர்கள் ஓய்வறை, சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கான ஓய்வறை என ரூ.18.50 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூரு ரயில்வே கோட்டத்தில் தர்மபுரி ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி ரயில் நிலைய கூட்ஸ் ஷெட்டில் சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.18.50 கோடியில் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும்,’ என்றனர்.