தர்மபுரி கலெக்டர் ஆபீசில் பரபரப்பு பெட்ரோல் கேனுடன் மனு அளிக்க வந்த 2 குடும்பத்தினர்
*போலீசார் தடுத்து நிறுத்தம்
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று 2 குடும்பத்தினர் பெட்ரோல் கேனுடன் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, தொப்பூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி(41), தனது மனைவி பாப்பாத்தி (27), மகள் மற்றும் மகனுடன் மனு கொடுக்க வந்தார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது, அதில் பெட்ரோல் கேன் இருந்தது.
உடனடியாக அதை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், சுப்பிரமணி தனது சின்ன மாமனாரிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.50 லட்சம் வாங்கியுள்ளார்.
சில மாதங்கள் கழித்து, பணத்தை கொடுத்து நிலத்தின் பத்திரத்தை கேட்டுள்ளார். ஆனால், அவர் நிலத்தை விற்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தொப்பூர் போலீசில் அவர் அளித்த புகாரின் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் சுப்பிரமணி குடும்பத்துடன் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களை டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதேபோல், தர்மபுரி மாவட்டம் அரூர் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி கலையரசி (35). இவரது மகன் ஆகாஷ் (15). குடும்ப தகராறில் கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கலையரசி, அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் ரூ.1.50 லட்சம் கொடுத்து நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் வீடு கட்ட முயன்றபோது, அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என மக்கள் தெரிவித்து, கட்டிடம் கட்ட அனுமதிக்கவில்லை.
இதனால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் அளித்த புகார் மீது அரூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கலையரசி தனது மகனுடன், பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஒரேநாளில் 2 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.