தனுஷ்கோடி அருகே 118 கிலோ இஞ்சி, பீடி இலை பறிமுதல்: கடலோரக் காவல் படை போலீசார் அதிரடி
ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக, தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ பீடி இலை, 118 கிலோ இஞ்சியை, இந்திய கடலோரக் காவல்படை போலீசார் கைப்பற்றினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே, மணல் தீடை பகுதியில், இலங்கைக்கு கடத்துவதற்காக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தனுஷ்கோடி மற்றும் மணல் தீடை பகுதிகளில் கடலோர காவல்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மூன்றாம் மணல் தீடையில் 6 கிலோ பீடி இலைகள், 118 கிலோ இஞ்சி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த கடலோரக் காவல்படையினர், அப்பகுதியில் கடத்தல்காரர்கள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் கைப்பற்றிய பீடி இலை மற்றும் இஞ்சியை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.