டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் முதல்வர், நடிகை திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரை பிடிக்க ஜிமெயில் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்
சென்னை: முதல்வர் வீடு, நடிகை திரிஷா வீடு, பாஜ தலைமை அலுவலகம், கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு என 5 இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு இந்த மின்னஞ்சல் வந்தது. உடனே தேனாம்பேட்டை போலீசார் தலைமையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீடு முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.புரளி என தெரிந்தது. மேலும், கவர்னர் மாளிகை, தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம், மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்தது.
அங்கு நடத்திய சோதனையிலும் புரளி என தெரியவந்தது. இதை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கிண்டி, தேனாம்பேட்டை, மாம்பலம், பட்டினப்பாக்கம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டமிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களின் மின்னஞ்சல் அனுப்பும் நபர்களின் விவரங்கள் குறித்து சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் ஜிமெயில் உள்ளிட்ட மின்னஞ்சல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதன்படி, மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களின் உண்மையான மின்னஞ்சல் ஐடி சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பியதும், குற்றவாளிகன் பாஸ்போர்ட்டை முடக்கி கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.