கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்
வத்திராயிருப்பு: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சித்தர்களின் சொர்க்கபூமி என இந்த மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமியான இன்று கோயிலுக்குச் செல்ல மதுரை, விருதுநகர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் இரவு தங்க அனுமதி கிடையாது, நீரோடைகளில் குளிக்கக்கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை கூறி வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.