குமரி மாவட்டத்தில் முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: காப்பு கட்டி விரதம் தொடங்கினர்
நாகர்கோவில்: கந்தசஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா இன்று (22ம்தேதி) தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டியை தொடங்கியதை ெதாடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி, தோவாளை செக்கர்கிரி முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள பாலமுருகன் சன்னதி, வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் உள்ள முருகன் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் இன்று காலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
விரதம் தொடங்கிய பக்தர்கள் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை விரத முறைகளை கடைபிடிப்பார்கள். ஒரு வேளை உணவு மட்டும் உண்டு, காலை மற்றும் மாலையில் நீர் ஆகாரம், பழங்கள் மட்டும் உட்கொண்டு கந்தசஷ்டி கவசம் உள்ளிட்ட முருகனின் பக்தி பாடல்களை பாடுவார்கள். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ம் தேதி (திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பின்னர் பக்தர்கள் நீராடி, விரதத்தை நிறைவு செய்வார்கள். 28ம்தேதி (செவ்வாய்) அனைத்து முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.