பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு அயோத்திக்கு 6 மாதங்களில் 23.82 கோடி பேர் வருகை
லக்னோ: அயோத்திக்கு 6 மாதங்களில் மட்டும் சுமார் 23.82 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப உற்சவத்துக்கு மேலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.
முதல் முறையாக தீப திருவிழா கொண்டாடப்பட்ட 2017ம் ஆண்டு 1.78 கோடி பேர் வந்திருந்தனர். இது 2018ம் ஆண்டு 1.95கோடியாகும், 2019ம் ஆண்டு 2.05 கோடியாகவும் அதிகரித்தது. கொரோனா தொற்றால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில், மீண்டும் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில் மட்டும் அயோத்திக்கு 23.82கோடி பேர் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி தீப உற்சவ விழாவிற்கு மேலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அயோத்தியின் தீப உற்சவ விழா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பொதுமக்களிடையே ஈர்ப்பை பெற்றுள்ளது.