இன்று முதல் 3 நாட்கள் ஓண விருந்து சபரிமலையில் பக்தர்கள் குவிகின்றனர்
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட ஓணம் சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கின. இன்று முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓண விருந்து வழங்கப்படுகிறது. வரும் 7ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும், நெய்யபிஷேகமும் நடைபெறும்.அதன் பிறகு 7ம் தேதி இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளை முன்னிட்டு நேற்று முதல் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.