ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாடு; சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. முக்கிய விஷேச தினங்களில் தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், அதிக மழை காலங்களில் மட்டும் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல, இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை அடிவாரம் வனத்துறை கேட் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பரிசோதனைக்கு பிறகு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
மலையில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் உடனடியாக மலையில் இருந்து கீழே இறங்கிவிட வேண்டும் எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பவுர்ணமியையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி செய்திருந்தனர்.