பர்வத மலை கோயிலில் விடியவிடிய பக்தர்கள் தரிசனம்
இம்மலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று விடிய விடிய சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
மேலும், சிறப்பு அலங்காரத்தில் பிரம்மராம்பிகை அம்மன் மற்றும் மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்பதை வனத்துறையினர் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.
மலையேறி செல்ல தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்க வீரபத்திரன் கோயிலில் பக்தர்களின் கைகளில் சக்திக்கயிறு கட்டப்பட்டது. நேற்று இரவு பவுர்ணமி தொடங்கியதால் நள்ளிரவில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. செங்குத்தான கடப்பாரை படி ஏறும்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.