தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.1.40 கோடியில் புனரமைப்பு பணிகள்
*இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு
சேத்துப்பட்டு : தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.1.40 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் கோயில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது கோயிலில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புகள், கோயிலில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டார். சிதிலமடைந்த ராஜகோபுரத்தின் வாசலை சீரமைக்க உத்தரவிட்டார்.
மேலும் கோயில் கொடிமரத்தின் தரத்தை பார்க்கவேண்டும், புனரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகத்திற்கான தேதி தேர்வு செய்ய வேண்டும் என்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரனிடம் தெரிவித்தார். இதையடுத்து இணை ஆணையரிடம் பக்தர்கள் கூறியதாவது: கோயில் கோபுரங்களில் பல இடங்களில் செடிகள் முளைத்துள்ளன. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்படுகிறது. அவற்றை சரியாக கண்டறிந்து பணிகளை செய்ய உத்தரவிட வேண்டும்.
கொடிக்கம்பம், நந்தி பீடம், பலிபீடம் ஆகியவற்றை ஆகம விதிப்படி உயரம் குறைக்கப்பட வேண்டும். கோசாலை மற்றும் சிலை பாதுகாப்பு அறை, முருகர் உற்சவர் சிலை சிதலமடைந்து உள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.
இதற்கு இணை ஆணையர் பிரகாஷ் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிதியில் உள்ள பணிகளை முதலில் நிறைவேற்றி, பின்னர் கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீதி பணிகளைச் செய்வோம் என்றார்.
ஆய்வின்போது செயற்பொறியாளர் சங்கரன், மண்டல ஸ்தபதி கண்ணன், ஆய்வாளர்கள் சத்யா, மணிகண்ட பிரபு, செயல் அலுவலர் உமேஷ் குமார், அறங்காவலர் குழுத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உடனிருந்தனர்.பின்னர் தேவிகாபுரம் மலைமேல் அமைந்துள்ள கனககிரீஸ்வரர் கோயிலிலும் ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டார்.