தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசுர வளர்ச்சியுடன் அசத்தும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை: விளையாட்டு தலைநகரில் இன்னொரு மைல்கல்

* சர்வதேச செஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், அலைசறுக்கு, கார் பந்தயத்தை தொடர்ந்து உலக ஹாக்கி போட்டி

Advertisement

‘ஒரு காலத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் சென்னையில் நடக்கும். அதற்கே தமிழகம் அமர்க்களப்படும். ஆனால், இன்றைக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துமளவுக்கு தமிழ்நாடு அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலக விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் பெயர் உரக்க ஒலிப்பதற்கு தமிழக அரசே முக்கிய காரணம்.

குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், சர்வதேச போட்டிகள் அதிகம் நடக்கத் துவங்கியுள்ளது. செஸ், டென்னிஸ், பார்முலா - 4 கார் பந்தயம் என்ற வரிசையில் வரும் 28ம் தேதி முதல் டிச.10 வரை உலக ஜூனியர் ஆண்கள் ஹாக்கித் தொடரானது சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. இது தமிழ்நாட்டின் சாதனையில் மற்றொரு மைல் கல் எனலாம்.

திமுக அரசு 2021, மே 7ம் தேதி பொறுப்பேற்றதில் இருந்து கல்வி, விளையாட்டிற்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. திறமையான வீரர்கள் எங்கிருந்தாலும் கண்டறிவது, அவர்களுக்கான விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தி, அறிவியல் பூர்வமாக அவர்களை தயார் செய்தல் என்று அடுத்தடுத்த இலக்கை நோக்கி தமிழக விளையாட்டுத் துறை முன்னேறி வருகிறது.

அதிலும், விளையாட்டுத்துறை அமைச்சராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. திறமையிருந்தும் மேலே வர முடியாத ஏராளமான வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி தந்து பட்டை தீட்டி வருகிறது விளையாட்டுத்துறை.

சாதனை மேல் சாதனை: ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் 46 பேர் பங்கேற்றனர். 28 பதக்கங்களுடன் திரும்பி வந்தனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட 18 பேரில் 15 பேர் பதக்கத்துடன் தான் திரும்பினர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 42 பதக்கங்கள் கிடைத்தது. இதுவரை ரூ.21,945 கோடி தமிழக விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

28 புதிய விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு விளையாட்டு மையங்கள், உயர்நிலை பயிற்சி மையங்கள், ஹாக்கி மைதானங்கள், சர்வதேச தர உள்விளையாட்டு அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் புதிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

சென்னையில் விளையாட்டு நகரம்: தமிழக வீரர்களின் விளையாட்டுத்திறனை மேமம்படுத்த, சென்னை செம்மஞ்சேரியில் 112.12 ஏக்கர் நிலத்தில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விளையாட்டு நகரத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நகரத்தில் ஒலிம்பிக் தர மைதானங்கள், நீர் விளையாட்டுக்களுக்கான ஏரி உள்ளிட்டவை அமைகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர்களை முறையான பயிற்சி அளித்து உருவாக்குவது தான் இதன் நோக்கம். 2 ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து 2027ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் துவங்கவுள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும்.

செமையாக நடந்த செஸ் தொடர்... உள்ளூர் வீரர்களை உற்சாகப்படுத்தினால் மட்டும் போதுமா? தேசிய அளவில் நம் மாநிலத்தை விளையாட்டுகளின் தலைநகராக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் முதல்வரின் முறையான திட்டமிடலால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு ரூ.114 கோடியில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது.

186 நாடுகளைச் சேர்ந்த 1,654 வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில் ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமல் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆசிய தொடரையும்... தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.22.66 கோடி நிதியுதவியுடன், 7வது ஆசிய ஆண்கள் ஹாக்கி- 2023 போட்டியானது, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் உலகின் முதல் பாலிகிராஸ் பாரிஸ் ஈகோ டர்ப் எனும் செயற்கை இழை மைதானத்தில் நடத்தப்பட்டது.

மேலும், 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியனைச் சேர்ந்த 5,630 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்தது. 5வது கேலோ போட்டிகளில் தமிழ்நாடு 8ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முறையாக.: கடந்த 2023ல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி மாமல்லபுரத்தில் ரூ.2.68 கோடியில் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே முதல்முதலாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயப் போட்டிகள் 2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடந்தது. 3.7 கிமீ சுற்று வட்டத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பங்குபெற்றனர். சர்வதேச மோட்டார் பந்தய விளையாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை தமிழ்நாடும், இந்தியாவும் பிடித்தது.

மேலும், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சர்வதேச ஸ்குவாஷ் போட்டியும் சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆஹா.. ஹாக்கியுமா..? : சர்வதேச அளவில் ஹாக்கி விளையாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த முறை உலக கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டிகளை யார் நடத்துவது என்ற வாதம் எழும் முன்பே, தமிழ்நாடு அரசு நாங்கள் ஏற்று நடத்துகிறோம் என தெரிவித்தது.

இதையடுத்து ஏற்பாடுகள் படுதீவிரமடைந்தன. சென்னை, மதுரையில் போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 72 போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கையிழை ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 1,500 பேர் அமரும் பார்வையாளர் கேலரி, வீரர்கள் தங்கும் அறைகள், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஹாக்கி தொடரில் ஏ, டி, இ பிரிவு அணிகள் மோதும் ஆட்டங்கள் மதுரையில் நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்க உள்ள அயர்லாந்து உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் மதுரை வந்துள்ளனர். இதையடுத்து மதுரை களை கட்டத் துவங்கியுள்ளது.

மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் என்று இல்லாமல் சர்வதேச அளவிலும் தமிழக விளையாட்டுத்துறை தடம் பதிக்க தமிழக அரசும், அத்துறையின் அமைச்சராக உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மிக முக்கிய காரணம் ஆகும். கல்வியிலும், விளையாட்டிலும் என்றுமே தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வதோடு, விளையாட்டுகளின் தலைநகராகவும் மாறிக் கொண்டு வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் பலப்பல சர்வதேச தொடர்களை ஏற்று நடத்தும் வல்லமை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது மிகையல்ல...!

* அலங்காநல்லூரில் டிசம்பர் 5ல் நடக்கிறது ஹாக்கி வீரர்களுக்காக ஸ்பெஷல் ஜல்லிக்கட்டு: கீழடிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு

உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் ஹாக்கி சம்மேளன நிர்வாகி சேகர் மனோகர் ஆகியோர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழர் பெருமை, கலாச்சாரத்தை வெளிநாட்டினர் அறியும் வகையில் டிசம்பர் 5ம் தேதி ஹாக்கி வீரர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு நடத்தி பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுவதுடன், கீழடி அருங்காட்சியகமும் அழைத்துச் செல்லப்படுவர்’ என்றனர்.

* தமிழர் பாரம்பரியம் போற்றும் ‘காங்கேயன்’

உலகத்தரம் மிகுந்த ஒரு ஹாக்கி தொடரின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்திற்கும் ‘காங்கேயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழக நாட்டின வகையான காங்கேயம் காளை இதனால் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையை பிரபலப்படுத்தியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

* ஒலிம்பிக் அகாடமி

ஒலிம்பிக் அகாடமி போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெறுவதற்குத் தகுதி படைத்த வீரர்களை உருவாக்கிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முனைந்துள்ளது. இதனால், உயர் செயல் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிட சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* 234 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்

* தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாகத் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டுக் கருவிகள் வழங்கும் திட்டம் 18.2.2024 ல் மதுரையில் தொடங்கப்பட்டது. ரூ.86 கோடியில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* நான்கே மாதங்களில் உருவான உலகத்தர அரங்கம்

மதுரையில் ஆண்கள் உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி நவம்பர் 28ல் துவங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து, பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அரங்கம் கட்டுமானப்பணி கடந்த ஜூலை மாதம் துவங்கியது. போட்டிகளுக்கு நாட்கள் மிகக்குறைவாக இருப்பதால், ஒருநாளின் கால அளவை 4 ஷிப்ட்களாக பிரித்து, இரவு பகலாக தொழிலாளர்கள் தொடர்ந்து கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுழற்சிமுறையில் தொழிலாளர்கள் அடுத்தடுத்து இப்பணிகளை தொடர்ந்து, தற்போது கட்டுமானம் நிறைவடைந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுமுன்தினம் (நவ. 22) திறந்து வைத்தார். ஹாக்கி மைதானத்தில் அமைக்கப்பட்ட செயற்கை இழை விரிப்புகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்தான் இந்த செயற்கை இழை மைதானம் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரங்குடன் கூடிய மைதானம் கட்டுமானப்பணியை துவக்கி முடிக்க குறைந்தது 10 மாதங்கள் பிடிக்கும். ஆனால் உயர் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன், உலகத்தரத்தில் இந்த கட்டுமானப்பணிகள் நான்கே மாதங்களில் இரவு, பகலாக மேற்கொண்டு முடிக்கப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* ஊக்கத்தொகை தந்து ஊக்கப்படுத்தும் துணை முதல்வர்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வென்றால் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டுத்துறை சார்பில் ஊக்கத்தொகை துணை முதல்வர் வழங்கி வாழ்த்தி வருகிறார். மேலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கி அவர்கள் போட்டிகளில் பங்கேற்று தாயகம் திரும்ப தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

துணை முதல்வரின் ஊக்கத்தால், வீடுகளில் முடங்கி கிடந்த வீரர், வீராங்கனைகள் வெளி உலகத்துக்கு வந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி துணை முதல்வர் பாராட்டினார்.

இதன் மூலம் சென்னை கண்ணகி நகர் மீது இருந்த பொதுவான கண்ணோட்டம் மாறியது. இதேபோல், ஆசிய இளையோர் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பியவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மாணவர்கள் தனித்திறமை வளர்க்க முதல்வர் கோப்பை

ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி , கல்லூரி மாணவ-மாணவியருக்கு ஓட்டம் முதல் பளுதூக்குதல் வரையிலான 24 வகையான போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளும் விளையாடாமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக 8 விதமான போட்டிகளும், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 25க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 14 நாட்கள் நடந்த 9 ஆயிரத்திற்கும் அதிகமான போட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் தங்க பதக்கம் பெற்றுள்ளனர். இந்தாண்டுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலத்துடன் முதலிடத்தையும், செங்கல்பட்டு 2ம் இடமும், கோவை 3ம் இடமும், சேலம் 4ம் இடமும், திண்டுக்கல் 5ம் இடமும், தூத்துக்குடி மற்றும் மதுரை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. இந்த போட்டிகளில் சுமார் ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Related News