சின்னசேலம் அருகே கரடிசித்தூர், பால்ராம்பட்டு கிராமங்களில் ₹1.21 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
சின்னசேலம் : சின்னசேலம் அருகே கரடிசித்தூர், பால்ராம்பட்டு கிராமங்களில் ஊராட்சி மன்ற, பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரடிசித்தூர், பால்ராம்பட்டு கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு துறைகளில் புதிய கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி ஒன்றியம், பால்ராம்பட்டு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், கரடிசித்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடமும், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடமும், கரடிசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.29 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட காலை சிற்றுண்டி கட்டிடமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கரடிசித்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டிடம் என்பது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் ஊராட்சி வழியாக முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
அனைத்து மக்களும் அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதே இதன் நோக்கமாகும். இப்பல்நோக்கு கட்டிடத்தில் உள்ள நியாய விலை கடையில் 238 குடும்ப அட்டைகள் உள்ளன.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.7,800 மதிப்பீட்டிலான அத்தியாவசிய பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி கொண்டு பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்து வெற்றியடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், சந்திரசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.