திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்: டிரைவர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் மாடவீதிகளில் சுவாமி உலா நடக்கும். இதில் பங்கேற்க பல லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருவர். அவ்வாறு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கள் பயணத்தில் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்கவும், அதிக கட்டணம் வசூலிக்காமல் இருக்கவும் தேவஸ்தானம் பல்வேறு ஆலோசனைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக வாகன கட்டணங்களை கட்டுப்படுத்துவது குறித்து திருப்பதி மாவட்ட போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் டாக்சி, மேக்சிகேப் வாகன உரிமையாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருப்பதி போக்குவரத்து டிஎஸ்பி ராமகிருஷ்ணாச்சாரி பேசுகையில், ‘டாக்சி உள்ளிட்ட வாகன டிரைவர்கள் பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மேலும் பக்தர்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டும். அதனை ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டும். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கவேண்டும்’ என்றார்.
தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேசுகையில், `திருமலையில் நிர்ணயிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். பிரம்மோற்சவத்தின்போது போக்குவரத்து நெரிசல் தவிர்க்க அனைத்து வாகன ஓட்டிகளும் முறையாக விதிகளை கடைபிடிக்கவேண்டும், ஒருவழி சாலை விதிகளை யாரும் மீறக்கூடாது. அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த விதி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை வாகனஓட்டிகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்றனர்.