அமெரிக்க விசா ரத்தானதால் விரக்தி அதிக மாத்திரை சாப்பிட்டு பெண் மருத்துவர் தற்கொலை
*உருக்கமான கடிதம் சிக்கியது
திருமலை : ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோஹிணி(38). திருமணமாகவில்லை. இவர் கிர்கிஸ்தானில் எம்பிபிஎஸ் முடித்து, கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு படிப்பிற்காக எச்1பி விசாவில் அமெரிக்கா நாட்டிற்கு சென்றார்.
அங்கு படிப்பை முடித்த ரோஹிணி, அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் வேலையில் சேர முயற்சித்து, டாக்டராக பணி நியமனமும் பெற்றார். இந்நிலையில், கடந்த மே மாதம் ரோஹிணி தனது குடும்பத்தினரை பார்க்க, இந்தியா வந்தார்.
இதற்கிடையில், அமெரிக்க விசா வழங்குவதில் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டது. இதனால் ரோஹிணி எச்1பி விசாவை ஜெ1 விசாவாக மேம்படுத்த விண்ணப்பித்தபோது அமெரிக்க அரசாங்கம் அதனை நிராகரித்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த ரோஹிணி, குடும்பத்தை பிரிந்து ஐதராபாத் பத்மாராவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக கடும் விரக்தியில் இருந்த ரோஹிணி 21ம் தேதி அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். பின்னர் தனக்கு தானே ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்றுமுன்தினம் தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசார் மேற்கொண்ட ஆய்வில், ரோஹிணி எழுதிய கடிதம் சிக்கியது. அதில், விசா கிடைக்காததால் மன அழுத்தம் ஏற்பட்டு, தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிலக்கல்குடா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ரோஹிணி எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரோகிணியின் தாய் லட்சுமி கூறுகையில், ‘தனது மகள் கிர்கிஸ்தானில் சிறந்த மருத்துவ மாணவியாக இருந்தார். வேலைக்காக அமெரிக்கா செல்ல விரும்பி நிலையில், விசா நிராகரிக்கப்பட்டதால் கடும் விரக்தியில் இருந்து வந்தார். அமெரிக்கா சென்றால் தனது எதிர்காலம் நன்றாக இருக்கும் என கூறி வந்தார். அதற்குள் இவ்வாறு நடந்துள்ளது’ என கூறினார்.