துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்கிறோம்
சென்னை: பொது மக்கள் சுட்டிக்காட்டும் பிரச்னைகளை உடனுக் குடன் சரிசெய்து வரு கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 1 சார்பில் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கிய சென்னை ரன்ஸ் 2025-ன் பல்வேறு பிரிவு ஓட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பருவமழை முன்னேற்பாடு பணிகளையெல்லாம் இப்போது ஆரம்பிக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வரவழைத்து தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகின்றோம். இந்த வருடம் மட்டும் கிடையாது. கடந்த 3, 4 ஆண்டுகளாகவே முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த வருடம் நிறைய முன்னேற்பாடுகள் செய்திருக்கின்றோம். 3 நாட்கள் நல்ல மழை பெய்தது, இப்போது விட்டுள்ளது. ரோடு பேட்ச் வேலைகள் எல்லாம் இப்போது மழை விட்டதால் கடந்த 3 நாட்களாக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. நீர்வளத்துறை பணிகள், நெடுஞ்சாலைத்துறை பணிகள், மாநகராட்சியின் பணிகள் எல்லாமே களத்தில் பார்க்கும்போது சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.
எங்கே சென்றாலும் ஒவ்வொரு பிரச்சனையையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்த பிரச்சனைகளை எல்லாம் உடனுக்குடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ செய்து கொடுக்கின்றோம். அடுத்து ஒரு வாரத்திற்கு மழை இல்லை என்று வானிலை மையம் சொல்லியிருக்கிறார்கள். அரசு சார்பாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றோம். பொதுமக்களும் அவர்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.