துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்: 2457 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
அப்போது அவர் பேசியதாவது: பொதுவாகவே திராவிட இயக்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தார்கள். இன்றைக்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு நிறைய மகளிர் ஆசிரியர்களாக இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள்.
திராவிட மாடல் அரசு அமைந்த நாள் முதல், நம்முடைய முதலமைச்சர் தீட்டுகின்ற ஒவ்வொரு திட்டமும், வரலாற்றுச் சாதனையாக உயர்ந்து நிற்கின்றது. பள்ளிகல்வித்துறை வரலாற்றிலே முதன்முறையாக மலைப்பகுதிகளில் காலிப்பணியிடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, 100க்கு 100 சதவீதம், இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கிறது. முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. இதன் மூலம் திராவிட மாடல் அரசு என்றால் சமூக நீதிக்கான அரசு என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர், பலமுறை பெருமையாக கூறி இருக்கிறார். தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் எதுவென்று கேட்டீர்கள் என்றால், அது நம்முடைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியினுடைய பணிக்காலம் தான் என்று பாராட்டியிருக்கிறார். அதனை இன்றைக்கு மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறித்து நிரூபித்து காட்டியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்களாகிய நீங்கள் தான். இதனை நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் அனைத்தும் நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீதான முதலீடாகத்தான் பார்க்கின்றார். அதனால் தான், ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்ற போதிலும், நமது முதலமைச்சர், ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, விளையாட்டுத் துறை அமைச்சராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள், பிள்ளைகளை படிக்கச் சொல்லும் அதே வேளையில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியை விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாசித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு நானே நேரில் பணிநியமன ஆணைகள் வழங்கவேண்டும் என ஆவலாக இருந்தேன். ஆனால், சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள்அறிவுரையின் காரணமாக, விழாவில் பங்கேற்க இயலாமல் போனது வருத்தம் அளிக்கிறது. கலைஞர் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பை ஆசிரியர் சமூகம் என்றென்றும் மறக்காது. அதே வழியில் நமது “திராவிட மாடல்” அரசுபணியை ஆற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பள்ளிகளில் காலியாக உள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் இன்று (நேற்று) வழங்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய பாஜ அரசு வழங்க மறுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு 81 கோடி ரூபாய் செலவில் கைக்கணினிகள், 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்விச் செலவினத்திற்கான உதவித் தொகை ரூ.50,000 உயர்வு என ஆசிரியர்களுக்கான திட்டங்களையும் குறைவின்றி நிறைவேற்றி வருகிறோம் என முதல்வர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் பள்ளிக் கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை 2026ல் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.