வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து ரூ.8 கோடியை போலி கையெழுத்திட்டு அபகரித்த 3 வங்கி ஊழியர்கள் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த அர்ஜூன் பாண்டியன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அமெரிக்காவில் எனது உறவினர் தீனதயாளன், அவரது மனைவி சித்ரா ஆகியோர் சார்பில் புகார் அளிக்கிறேன். அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் தீனதயாளன், சித்ரா பெயரில் என்ஆர்இ வங்கி கணக்கு உள்ளது. இதில் இருந்து 6.6.2015 முதல் 6.6.2020 வரை காசோலை மூலம் வங்கி அலுவலர்கள் போலியாக கையெழுத்து போட்டு வங்கி கணக்கில் இருந்து ரூ.1.43 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் தனியார் வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, அமெரிக்காவில் வசித்து வரும் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து அவர்களை போன்று போலி கையெழுத்து போட்டு வங்கியில் பணியாற்றி வரும் துணை மேலாளர் வேணுகோபால்(50), வங்கி கணக்காளர்கள் குலோத்துங்கன்(49), தனசேகரன்(41) ஆகியோர் கூட்டு சேர்ந்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புநிதியில் இருந்து மொத்தம் ரூ.8 கோடி வரை 3 ஊழியர்களும் கையாடல் செய்து இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் தனியார் வங்கி துணை மேலாளர் உட்பட 3 ஊழியர்களை அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர்.