இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்குதல், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
12 கோயில்களில் 17 புதிய திட்டப் பணிகளுக்குகான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் கோயிலில் 68.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, பக்தர்கள் காத்திருப்பு கூடம் மற்றும் அருளாளர் அருணகிரிநாதர் கோயில் அருகிலுள்ள இடத்தில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகள்; விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், நாச்சியார் (ஆண்டாள்) கோயிலில் 12.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் விமானங்களில் இரவு நேரங்களில் ஒளிரூட்டும் வகையில் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டும் பணிகள்; ராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் 9.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயிலின் இரண்டாம் பிரகாரம் முழுவதுமுள்ள சிமென்ட் மற்றும் செராமிக் தளங்களை அப்புறப்படுத்தி புதிதாக தளவரிசை கற்கள் அமைத்தல் மற்றும் கோயிலின் மூன்றாம் பிரகார பக்கப் பகுதியில் உள்ள சிமென்ட் தளங்களை அப்புறப்படுத்தி புதிதாக தளவரிசை கற்கள் அமைக்கும் பணிகள்;
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலில் 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணி; திருவானைக்காவல், ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் 5.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; சென்னை மாவட்டம், வில்லிவாக்கம், அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் 5.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதான மண்டபம் மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள்; தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் 4.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி; சென்னை மாவட்டம், புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயிலில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் மற்றும் அர்ச்சகர்கள் குடியிருப்பு கட்டும் பணி;
ராயப்பேட்டை, சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் 2.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டும் பணி; சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் 1.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், அ.கோ.படைவீடு, ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் 1.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி; என மொத்தம் 124 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 17 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான 9 திருக்கோயில்களை புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தல்
மன்னர்களாலும், நமது முன்னோர்களாலும் கட்டப்பட்டு திராவிட கட்டடக் கலையின் பொக்கிஷங்களாக திகழும் தேவாரம் பாடல் பெற்ற மற்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில்கள், இதர கோயில்களின் கட்டடக் கலை மற்றும் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களாக 714 கோயில்கள் கண்டறியப்பட்டு, அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் முதலமைச்சர் 2022-2023 ஆம் நிதியாண்டு முதல் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 425 கோடி ரூபாயினை அரசு நிதியாக வழங்கியுள்ளார். அரசு நிதி, உபயதாரர் நிதி, பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி என மொத்தம் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு, இதுவரை 65 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களான திருநெல்வேலி மாவட்டம். களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் 8.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல், காமாட்சியம்மன் கோயில் 7.63 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், கைலாசநாதசுவாமி கோயில் 4.16 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமி கோயில் 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், திருமோகூர், காளமேகப்பெருமாள் கோயிலுக்கு 2.81 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம், கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் கோயில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம், புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் கோயில் 1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் கோயில் 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம், சோழவந்தான், ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் 1.52 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 32.53 கோடி மதிப்பீட்டில் 9 கோயில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
11 திருக்கோயில்களில் 14 முடிவுற்ற கட்டுமானப் பணிகளை திறந்து வைத்தல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 26.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நிர்வாக கட்டடம்-B, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சுகாதார வளாகம்-2; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி கோயிலில் 6.50 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட லட்சுமி தீர்த்தக்குளம்; சென்னை மாவட்டம், மாதவரம், கைலாசநாதர் கோயிலில் 3.17 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட திருக்குளம்; கோவை மாவட்டம், ஆனைமலை, மாசாணியம்மன் கோயிலில் 3.15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசைத் தடுப்புகள்; சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயிலில் 2.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு;
மயிலாப்பூர், திருவள்ளூவர் கோயிலில் 2.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு; திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் 1.93 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம்; ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் சார்பில் நடத்தப்படும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.1.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம்; திண்டுக்கல் மாவட்டம், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 1.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பஞ்சாமிர்த கூடம்; கோவை மாவட்டம், மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோயிலில் 1.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வசந்த மண்டபம்; ஈரோடு மாவட்டம், தங்கமேடு, அருள்மிகு தம்பிக்கலை ஐயன்சுவாமி திருக்கோயிலில் 1.10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; என மொத்தம் 51.19 கோடி ரூபாய் செலவிலான 14 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.பழனி, பொ.ஜெயராமன், தனி அலுவலர் (ஆலய நிலங்கள்) சு.ஜானகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தக்கார் ஆர். அருள்முருகன், திருச்செந்தூர் நகரமன்றத் தலைவர் சிவ ஆனந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்களும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.