உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை உயர்கல்வித் துறை சார்பில் 778 கோடி ரூபாய் செலவிலான கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதலமைச்சரால் உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்:
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 19 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள்;
சென்னை, தரமணி மையத் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள அச்சு தொழில்நுட்பப் பயிலகம், நெசவு தொழில்நுட்ப கல்லூரி, தோல் தொழில்நுட்பப் பயிலகம், வேதியியல் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் மாநில வணிகக் கல்வி பயிலகம் ஆகிய ஐந்து சிறப்பு நிறுவனங்களில், 49 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டடங்கள், வகுப்பறைகள், முதல்வர் அறைகள், தேர்வு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கல்விசார் கட்டடங்கள்;
சென்னை, தரமணி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 18 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள்; மதுரை மாவட்டம், அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் 15 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடங்கள்; திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 7 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம்;
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலும், வேலூர், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிலும், போடிநாயக்கனூர், அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 66 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 8 கோடியே 67 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கங்கள்; காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் உடற்கல்வி துறைக்கான தரைதள கட்டடம் மற்றும் நுண்கலை துறைக்கான முதல் தளக் கட்டடம்;
திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 ஆய்வகக் கட்டடங்கள்; என மொத்தம் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி ஆணையர் த.ஆபிரகாம், இ.ஆ.ப., கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.