தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. சென்னை, கோவை, மதுரை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மழையினால் தேங்கியிருக்கக் கூடிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதாக கூறப்படும் நிலையில், அதீத காய்ச்சலே டெங்குவிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு இருப்பதும் டெங்குவிற்கான அறிகுறியே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலும் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் மற்றும் பெரியோர்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.