தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவை துறைகள் அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. புகை மருந்து தெளிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகைகளை வெளியிட்டு, தமிழ்நாடு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டனர்.
தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கிராமத்தில் 3க்கும் மேற்பட்ட காய்ச்சல்கள் இருக்குமானால் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற எந்த மாதிரியான பாதிப்புகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தல் செய்துள்ளார். அந்த வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு 11,966 முகாம்கள் நடத்தப்பட்டு, 10,53,930 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பருவமழையை முன்னிட்டு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 1,530 நடத்தப்பட்டு 75,432 பேர் பயன்பெற்றுள்ளனர். பெங்கல் புயல் பாதிப்புகளின் காரணமாக 18,455 முகாம்கள் நடத்தப்பட்டு 21,48,732 பேர் பயனடைந்துள்ளனர். மழைக் காலங்களில் வீடுகளைச் சுற்றி தேங்கி இருக்கின்ற மழைநீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. ஏடிஸ் என்கின்ற கொசுக்களை தடுப்பதற்குரிய முயற்சியாக சேவை துறைகள் ஒருங்கிணைத்து வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளை கண்டறிந்து தூய்மைப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 15,796 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும் இறப்பை பொறுத்தவரை 8 என்கின்ற அளவில் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இறப்பும் இணை பாதிப்புகள் உள்ளவர்களால் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் டெங்கு பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், மருந்து நிர்வாகத்துறை ஆணைய லால்வேனா, ஓமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் மதுசூதன் ரெட்டி, தேசிய சுகாதார குழுமம் குழும இயக்குநர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினித் மற்றும் அனைத்து சேவைத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.