திருமங்கலத்தில் அணுகுச் சாலை அமைப்பதற்காக வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு: போக்குவரத்து மாற்றம்
திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே மேம்பால பணியில் அணுகுச் சாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க வணிக கட்டிடங்கள் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மின்சப்ளை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விமான நிலைய ரோட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தேவர் சிலை அருகே துவங்கும் மேம்பாலம் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையம் பகுதியில் நிறைவடையும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வீஸ் ரோட்டிற்காக திருமங்கலம் யூனியன் அலுவலகத்தின் போர்டிகோ இடிக்கப்பட உள்ளது.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் பாதை முற்றிலும் தடைப்படும் என்பதால், யூனியன் அலுவலகம் உச்சபட்டி பஞ்சாயத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுரி பகுதிக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு ஜேசிபி இயந்திரம் மூலமாக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வணிக வளாக கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது அலுவலகத்திற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய சாலை முற்றிலும் மூடப்பட்டு தேவர் சிலையின் வலதுபுறம் புதிதாக அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடு வழியாக காமராஜபுரம், கற்பகநகர் பகுதிக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யூனியன் அலுவலக வளாகத்தில் இருக்கும் வேப்பமரத்தை அகற்றிய பின் போர்டிகோவை இடிக்கும் பணி துவங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.