ஜனநாயக கடமை மீறல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று மக்களவையில் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் உயர்கல்விக்கென தனி ஆணைய மசோதா, அணுசக்தி மசோதா, கார்ப்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மோடி அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், 36 கட்சிகளை சேர்ந்த 50 எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் பணி குறித்து கட்டாயம் விவாதம் நடத்த வேண்டும். டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு, புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடுவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி தடுக்கப்படுவது தொடர்பாக விவாதம் நடத்த அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக அரசு தரப்பில் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.
விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த பிறகு தான் 3 வேளாண் சட்டங்களை மோடி அரசு வாபஸ் வாங்கியது. மற்றபடி விவாதங்களின்றி பல மசோதாக்கள் நிறைவேற்றி உள்ளது. இதுபோன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நாட்களையும் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்பது சுமார் ஒரு மாதம் நடைபெறும். அதாவது, நவம்பர் 2வது வாரம் தொடங்கி, டிசம்பர் 2வது வாரம் கூட்டத்தொடர் முடிவடையும். அடுத்த சில வாரங்களிலேயே புத்தாண்டு பிறக்கும். புத்தாண்டில் குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்.
தொடர்ந்து நிதிநிலை அறிக்கை விவாதம் என்று சுமார் 75 நாட்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும். ஆனால், குளிர்கால கூட்டத்தொடர் இந்த முறை 19 நாட்கள் என குறுகிய கூட்டத்தொடராக சுருங்கி இருக்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடர் என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் இணைந்து செயல்பட்டால்தான் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
இன்னும் சொல்லப்போனால் ஆளுங்கட்சிக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும் உண்டு. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், நாடாளுமன்ற அமர்வுகள் குறைந்து கொண்டே போவது மிகவும் கவலை அளிக்கிறது. முதலாவது மக்களவை (1952-57) 677 நாட்களும், 2வது மக்களவை (1957-62) 567 நாட்களும், 3வது மக்களவை (1962-67) 578 நாட்களும், 4வது மக்களவை (1967-71) 467 நாட்களும், 5வது மக்களவை (1971-77) 613 நாட்களும் நடைபெற்றன. 15வது மக்களவை (2009-14) 356 நாட்களும், 16வது மக்களவை (2014-19) 331 நாட்களும், 17வது மக்களவை (2019-24) 272 நாட்களும் நடைபெற்றன.
தற்போதைய 18வது மக்களவை தொடர்(ஒன்றரை ஆண்டுகள்) இதுவரை 91 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற கூட்ட நடவடிக்கைக்காக மக்களின் வரிப்பணம் ஒரு நிமிஷத்துக்கு ரூ.2.5 லட்சம் வீதம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.50 கோடி செலவு செய்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அமளி, முடக்கம் காரணமாக 90 மணி நேரம் நடைபெறவில்லை. இதனால், மக்கள் வரிப்பணம் ரூ.144 கோடி விரயமானது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காணும் கூட்டத்தொடராக அமைய வேண்டும். அவை நடவடிக்கையின் அமர்வு குறைக்கப்படுவதை ஜனநாயக கடமை மீறலாக தான் பார்க்கப்படுகிறது.