ஜனநாயக முறையில் போராட அனைவருக்கும் உரிமை உள்ளது கிங்டம் திரைப்படம் வௌியான தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி உள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கற்பனை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் எந்த பிரிவினரையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘ஜனநாயக நாட்டில் படைப்பாளிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. நாம் தமிழர் கட்சி அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. முறையாக அனுமதி பெற்று, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டங்களை நடத்தலாம். போராட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு இடையூறு விளைவித்தால் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டார்.