மக்களாட்சி மலருமா...?
மணிப்பூர் மாநிலத்தில், குக்கி இன மக்கள் தங்களது பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி நிர்வாக கவுன்சில் அமைக்கக்கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 2023ம் ஆண்டு மைத்தேயி-குக்கி இனக்குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில், 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். கலவரத்தின்போது மிசோரம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் பற்றிய தகவல்கள் இல்லை.
நாட்டையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வன்முறைகள் நிகழ்ந்த மணிப்பூர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. உலக நாடுகள் எல்லாம் சுற்றி வரும் மோடி உள்நாட்டில் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்திற்கு மட்டும் செல்லாததது ஏன்?. இம்மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேரில் செல்லாதது ஏன்? அமைதி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளாதது ஏன்? என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்தையும் முடக்கின.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார். அம்மாநில தலைநகர் இம்பால் காங்லாகோட்டை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து, சுராசந்த்பூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின்போது அம்மாநிலத்தில் ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ‘’மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் 4 மாதங்களாகி விட்டன. பிரதமர் மோடி கனத்த மவுனம் மட்டுமே காத்து வந்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் வன்முறைக்கு முடிவுகட்ட பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. அதனால் பிரதமர் மோடியை மணிப்பூர் மக்களாகிய நாங்கள் வரவேற்க மாட்டோம். மணிப்பூர் வரும் மோடிக்கு எதிராக “Go Back Modi” முழக்கத்தை முன்வைக்கிறோம்’’ என சுராசந்த்பூரில் ஒரு பிரிவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘’மணிப்பூர் மக்களுக்கு, இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று தனிநாடு உருவாக்கக்கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு. மோடியின் மணிப்பூர் வருகைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.
மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்’’ எனக்கூறி அம்மாநில மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. எதிர்தரப்பினர் மட்டுமின்றி, மாநில பாஜ நிர்வாகிகளும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மோடியின் வருகையை கண்டித்து பாஜ நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூயை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். ‘’மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை; அரசியல் குழப்பம் உச்சகட்டத்தில் இருக்கிறது.
அம்மாநிலத்தில் எதிர்ப்பும், கொந்தளிப்பும் வலுத்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.’’ என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இனக்கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு செல்லும் பிரதமர் மோடி, புதிய திட்டங்களை தொடங்கி வைத்தால் மட்டும் போதாது, இடம்பெயர்ந்த மக்களின் துயரங்களை துடைப்பாரா? ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் மக்களாட்சி மலர வழி வகுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.
