பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு ஆழிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டதில் பாமக நிறுவனர் ராமதாஸ் வசித்து வருகிறார். அவரது பாதுகாப்புக்காக தற்போது 3 காவலர்கள் உள்ளனர். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தும், அன்புமணி சென்னை பனையூரிலிருந்தும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து ராமதாஸ் தரப்பில் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஒட்டு கேட்பு கருவியை யார் வைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாசின் தீவிர ஆதரவாளரரும் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்களால் ராமதாஸ் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாமக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வந்தனர். அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ராமதாசுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தலைமை செயலர் மற்றும் டிஜிபியை சந்தித்து அருள் எம்எல்ஏ தலைமையில் பாமக நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில்; எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபகாலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய ராமதாஸ் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பாமகவினர் மத்தியிலும், பொதுமக்கள்,அனைத்து கட்சித்தலைவர்கள். அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் ராமதாஸ். மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.
ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமகவின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் ராமதாஸ் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் ராமதாஸ் வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸ் அவர்களை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திடகேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.