கிராமப்புறங்களில் சுகாதார வளாகங்களை சீரமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமபுறங்களில் சுகாதார வளாகங்களை முறையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி தாலுகா பகுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்கள், திறந்த வெளியை பயன்படுத்துவதை தவிர்க்க ஆங்காங்கே பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.
இதனால் பல ஆண்டுக்கு முன்பு சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஊரக வளர்ச்சி கட்டிடங்கள் சிறப்பு பராமரிப்பு திட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் கால போக்கில், இந்த சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள கழிவறை கதவுகள் சேதமாகியும் முறையாக தண்ணீர் வினியோகிக்காமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், அதனை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து காடுபோல் உள்ளதால், சுகாதார வளாகத்திற்கு செல்லும் வழித்தடம் உருமாறிபோனது. இந்த சுகாதார வளாகங்களை முறையாக பராமரித்து தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலை நீடித்தால், வருங்காலங்களில், பொது இடங்களில் பல இடங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி போவதுடன், அரசின் நிதியும் வீணாகும் நிலை உண்டாகிறது.
எனவே, கிராமபுறங்களில் சுமார் 10 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.